நிகோலஸ் கேஜ்: பணம் மற்றும் புகழ் ஆகிய இரண்டில் இருந்து வீழ்ந்த சில பரபலன்களைப்பற்றி நாம் இந்த தொடர் கட்டுரைகளில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் பிரபலம், ஹாலிவுட் நடிகர் நிகோலஸ் கேஜ்.
ஆரம்ப காலம் : நிகோலஸ் கேஜ் 90களில் இருந்து மிகவும் அறியப்பட்ட பிரபல நடிகர். அவர் கொப்போலா பரம்பரையில் வந்த வாரிசு என்பதால் அவரது இளமைக்காலம் இனிமையாகவே இருந்தது. அவர் வேண்டியது எல்லாம் அவருக்கு கிடைத்தது. திரைத்துறை மீது இருந்த காரணத்தால் அவர் பள்ளிப்படிப்பையும் பாதியிலேயே நிறுத்திவிட்டு நடிப்பு பயின்றார். அதன் காரணமாவும் திரைத்துறையில் நடிகராக அறிமுகம் ஆவது ஒன்றும் அவருக்கு கடினமானதாக இல்லை. காட் பாதர் திரைப்படங்களின் இயக்குனரான பிரான்சிஸ் போர்ட் கோப்போலா தான் இவரது நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவல்.
திரைப்பயணம்: நடிகராக அவர் அறிமுகம் ஆனபோதும் அவருக்கு என்று ஓரிடம் அவருக்கு அமையவில்லை. காரணம் அவர் நடித்த மேம்போக்கான படங்கள். அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள். 80களின் தொடக்கத்திலேயே அவர் நடிக்க தொடங்கிவிட்டாலும், அவரை பிரபலமாக்கியது 1995ஆம் ஆண்டு வெளிவந்த ‘லீவிங் லாஸ் வேகாஸ் ‘ என்னும் திரைப்படம் தான். அதில் வாழ்க்கையை வெறுத்த கதாசிரியர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக அவர் பல உயரிய விருதுகள் வாங்கினார், ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உட்பட. ஆனால் அது தான் அவர் நடிப்பிற்காக வாங்கிய சிறப்பு விருது. அதன் பிறகு அவர் நடிப்பு பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானதே தவிர நல்ல பெயர் கிடைக்கவில்லை.
நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர், அடுத்தகட்டமாக கமெர்ஷியல் படங்களில் நடிக்க ஆரமித்தார். அதன் மூலம் பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்தார். அவர் நடித்து புகழ் பெற்ற கமெர்சியல் படங்கள் சந்தையில் நல்ல நிலைக்கு விலைக்கு போனது. உதாரணமாக பேஸ் ஆப், கான் ஏர், நேஷனல் டிரஷர், கோஸ்ட் ரைடர், விண்ட் டாக்கர்ஸ், கிக் ஆஸ் போன்ற படங்களை குறிப்பிடலாம். அதிலும் அவர் நடித்த கோஸ்ட் ரைடர் கதாபாத்திரம் வெகு பிரபலம், இந்தியா உட்பட.
நிகோலஸ் கேஜ் எந்த அளவுக்கு சம்பாதித்தாரோ அதே அளவுக்கு கொடை வள்ளலாகவும் இருந்தார். பல நல்ல காரியங்களுக்கு மில்லியன்களில் டாலரை வழங்கினார். மூன்று லட்சம் சிறார்களை பராமரிக்கும் அமைப்பிற்கு 2 மில்லியன் டாலர்களை வழங்கினார். அதே போல கத்ரீனா புயலில் சின்னாபின்னமான நகரை மீட்பதற்காக 1 மில்லியன் டாலர் பணம் இனாமாக கொடுத்தார். நீங்க இங்கிருக்கும் நடிகர்களோடு இணைத்து பார்க்க கூடாது. அவங்க வேற மாறி.
சொத்து மோகம்: நிகோலஸ் கேஜ் அவர்களுக்கு சொத்துக்கள் வாங்கி குவிப்பதில் அலாதி பிரியம். ஆடம்பரமான வாழ்க்கையும் வாழ்ந்தார். எண்ணற்ற பல அசையா சொத்துக்களை அவர் வாங்கி மகிழ்ந்தார். குறிப்பாக வித்தியாசமான சொத்துக்களை வாங்குவதில் ஆர்வமாக இருந்தார் அவர். . அமானுஷிய அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கினார், அமானுஷிய கதை எழுதுவதற்கு என்று காரணம் கூறினார். பிரமிட் வடிவில் கல்லறை ஒன்றையும் காட்டினார். பிற்காலத்தில் அவருக்கு என்று நினைத்து செய்தாரா தெரியவில்லை.
ரியல் எஸ்டேட் துறையில் இருந்த மோகத்தால் நிகோலஸ் கேஜ் தனது நிலையில் இருந்து கீழே இறங்க ஆரமித்தார். 2009ஆம் ஆண்டு அதிகமான வரி செலுத்தும் நபராக இருந்த கேஜ், சில தவறான சொத்துக்களை வாங்கியதால், சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரிடம் ரியல் எஸ்டேட் மானேஜராக இருந்த சமேயுள் கெவின் தான் சரியான வகையில் நிர்வாகம் செய்ய தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தினார். இப்படி இறங்குமுகத்தில் இருந்த நிகோலஸ் கேஜ் 130மில்லியன் டாலர் அளவுக்கு வரி கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் காரணமாக மிக சாதாரணமான திரைப்படங்களில் எல்லாம் பணத்துக்காக நடித்தார். அத்திரைப்படங்கள் மிக குறைவான தரத்தில் அமைந்தது. அதனால் ஆஸ்கார் விருது வாங்கிய நடிகரா இப்படி? என்று கேள்வி கேட்கும் நிலைக்கு வந்தார்.
சொந்த வாழ்க்கை: நிகோலஸ் கேஜ்-ன் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்பாக அமைந்தது என்று சொல்ல முடியாது. அவர் இதுவரை ஐந்து முறை திருமணம் செய்துள்ளார். இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது பிள்ளைக்கு கால்-எல் என்று பெயர் வைத்துள்ளார். அது சூப்பர்மேன்-னின் பிறப்பு பெயர். அவர் சூப்பர்மேன்-னின் மிகப்பெரும் ரசிகர்.
இப்படியாக செல்வசெழிப்புடனும், பல மனைவியருடனும் வாழ்ந்த நிகோலஸ் கேஜ் தாம் வைத்த அகலக்காலால் பணம் புகழ் இரண்டையும் இழந்தார்.