ஏதாவது ஒரு உண்மை சம்பவம் அடிப்படையிலோ அல்லது புத்தகத்தின் அடிப்படையிலோ எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் பயோபிக் திரைப்படங்களாக இருந்தாலும் அல்லது உண்மை சம்பவத்தில் இருக்கும் மர்மமான விஷயங்களாக இருந்தாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து விடுகிறது.
அதன் அடிப்படையில் வெளிவந்த நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை குறித்த படம், ஜெயலலிதாவின் பயோபிக் படம், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படம் என அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளிவந்த நாராயணன் நம்பியின் பயோபிக் படமான ராக்கெட்ரி திரைப்படத்திற்கு கூட அதிக அளவு வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இதை நன்றாக புரிந்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள் தற்போது உண்மை கதைகளை படமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சில நிறுவனங்கள் தமிழ்நாட்டையே புரட்டி போட்ட சில சர்ச்சையான உண்மை சம்பவங்களை படமாக்கும் முயற்சியில் இருக்கிறது.
நம் தமிழ்நாட்டில் எத்தனையோ சர்ச்சையான சம்பவங்கள் நடந்திருந்தாலும் பல வருடங்களுக்கு முன்பு நடந்த லட்சுமி காந்தன் கொலை வழக்கு இப்பவும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதைப் பற்றி நிறைய நாவல்களும், புத்தகங்களும் கூட வெளிவந்திருக்கிறது. ஆனாலும் இதில் இருக்கும் மர்மம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
1944 ஆம் ஆண்டு லட்சுமி காந்தன் என்னும் தமிழ் பத்திரிகையாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இந்த விசாரணையில் சந்தேகத்திற்குட்பட்ட வகையில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கிய நபர்களாக திரை துறையில் மிகவும் புகழ்பெற்றிருந்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரும், இயக்குனர் ஸ்ரீ ராமுலு நாயுடு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை தமிழ்நாட்டையே மிகவும் பரபரப்பாகிய கொலை வழக்கு. இந்த விசாரணையில் இயக்குனர் மீது எந்த தவறும் இல்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் தியாகராஜ பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதை எதிர்த்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதும் அவர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. அதன் பிறகு அவர்கள் அப்போது நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கவுன்சிலுக்கு விண்ணப்பித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை பெற்றனர். ஆனாலும் அந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் யார் என்ற மர்மம் மட்டும் தீர்க்கப்படாமலே இருக்கிறது.
இந்த சம்பவத்தை தான் தற்போது சோனி நிறுவனம் கையிலெடுத்துள்ளது. இந்த விவகாரத்தை அந்த நிறுவனம் வெப் தொடராக தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இந்த வழக்கின் உண்மை நிலை என்ன என்பதை அந்த தொடர் விளக்கமாக காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இந்தியாவையே மிகவும் பரபரப்பாக்கிய மற்றொரு சம்பவமும் வெப் தொடராக மாற இருக்கிறது. அதாவது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை, நடிகர் எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்டார். கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த எம் ஆர் ராதா அவருடைய வீட்டிற்கே நேரடியாக சென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். அது மட்டுமல்லாமல் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.
அதன் பிறகு இந்த வழக்கு விசாரணையில் அவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக தான் இந்த சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பின்னணியில் பல்வேறு விதமான காரணங்களும் சொல்லப்பட்டது. இறுதியில் எம் ஆர் ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் எம் ஆர் ராதா இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதில் அவருடைய தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் அவர் விடுதலையானது குறிப்பிடப்பட்டது. இந்த சம்பவத்தை தான் தற்போது ராதிகாவின் ராடான் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. எம் ஆர் ராதாவின் மகளான ராதிகா இந்த தொடர் மூலம் அன்று என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.