வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரபல தயாரிப்பாளர் மீது போக்சோ வழக்கு.. சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

இந்திய தொலைக்காட்சி ராணி

பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா மற்றும் நடிகை ஷோபா கபூரின் மகள் ஏக்தா கபூர். இவர் தனது பாலாஜி டெலிபிலிம்ஸ் மூலம் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். சினிமாவிலும் தொலைக்காட்சித்துறையிலும் திறமையாக செயல்பட்டு, பல விருதுகள் வென்றுள்ளார். குறிப்பாக இந்தியில் மட்டும் 30 திரைப்படங்களை தயாரித்து முன்னனி தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இதில், நாகினி கும்கும் பாக்யா, கசம் தேரே பியார் கி, குண்டலி பாக்யா உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறார். இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சிறப்புடன் தயாரித்து வழங்கி வருவதால் இவர் இந்திய தொலைக்காட்சி ராணி என அழைக்கப்படுகிறார்.

ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ்

ஏக்தா கபூர் தனது டிஜிட்டல் பயன்பாடான ஏ.எல்.டி பாலாஜி நிறுவனம் மூலம் 40 வெப்சீரிஸ்களையும் அறிமுகம் செய்துள்ளார். தயாரிப்பாளராக மட்டுமின்றி, திரைக்கதை, கதை எழுதுதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஆசியா வீக் இதழின் ஆசியாவின் அதிக சக்தி வாய்ந்த தகவல் தொடர்பாளர்களில் 50 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது பாலாஜி டெலி பிலிம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், கிரியேட்டிவ் ஹெட்டாக இருக்கும் ஏக்தா கபூருக்கு ஆல்ட் பாலாஜி என்ற ஓடிடி தளமும் உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் அவர் வென்றிருக்கிறார். இந்த நிலையில், ஆல்ட் பாலாஜி ஓடிடி தளத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏக்தா கபூர், ஷோபா கபூர் தயாரிப்பில் காந்தி பாட் என்ற அடல்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில், மைனர் நடிகை ஒருவரின் தகாத சில காட்சிகள் ஒளிபரப்பானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஏக்தா கபூர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ஏக்தா கபூர், ஷோபா ஆகியோர் மீது போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சர்ச்சைகுரிய காந்தி பாட்டி ஷோ அந்த ஓடிடியில் இடம்பெறவில்லை. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News