செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினியவே மிரட்டிய சிங்காரவேலன்.. பலநாள் மோசடியை அம்பலப்படுத்திய விமல் 

தற்போது திரையுலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி அதன்மூலம் பிரபலமாக இருப்பவர் மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன். இவரை லிங்கா சிங்காரவேலன் என்று கூறினால் பலருக்கும் தெரியும். ஏனென்றால் லிங்கா திரைப்படத்தை வைத்து இவர் ஏற்படுத்திய சர்ச்சை தான் அவரை அதிக பிரபலமாக்கியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்த திரைப்படம் லிங்கா. இந்த படம் வெளியான இரண்டு நாட்களிலேயே படம் நஷ்டம் என்று கூறி உண்ணாவிரதம் இருந்து, ரஜினியை மிரட்டி பல கோடிகளை நஷ்ட ஈடாக வாங்கியவர் தான் இந்த சிங்காரவேலன்.

சிறு சிறு படங்களை வாங்கி விநியோகம் செய்து வந்த இவர் பைனான்ஸ் மற்றும் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் விமல் மீது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார். அதாவது விமல் நடிப்பில் மன்னர் வகையறா திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

அந்தத் திரைப்படத்தை திருப்பூர் கணேசன் என்பவர் தயாரித்தார். ஆனால் சில பொருளாதார நெருக்கடியின் காரணமாக படம் பாதியிலேயே நின்றது. அதன்பிறகு திருப்பூர் கணேசனும் மரணமடைந்தார். இதனால் அந்தப் படத்தை விமல் தயாரிப்பதற்கு உதவி செய்வதாக கூறி உள்ளே வந்தவர்தான் சிங்காரவேலன்.

அதன் பிறகு சில பைனான்சியர்களிடம் இந்த படத்திற்காக சில கோடிகள் கடனாகப் பெற்று ஷூட்டிங் நடத்தப்பட்டு படமும் வெளியானது. 8 கோடி வரை லாபம் பார்த்த இந்த திரைப்படம் நஷ்டம் இல்லாமல் தப்பித்தது. ஆனால் சிங்காரவேலன் இந்தப் படத்திற்கு இரண்டு கோடி நஷ்டம் என்று பொய்க்கணக்கு கூறியிருக்கிறார்.

மேலும் அந்த குறிப்பிட்ட தொகையை பைனான்சியருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி விமலிடம் இருந்து வாங்கி இருக்கிறார். ஆனால் வாங்கிய பணத்தை பைனான்சியருக்கு கொடுக்காமல் அவர்களை வைத்தே விமல் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக விமல் கடந்த 2020ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதன்பிறகு விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் சிங்காரவேலன் விமலுக்கு தரவேண்டிய பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சிங்காரவேலன் விமலை பணம் கேட்டு மிரட்டுவது மட்டுமல்லாமல், அவரை பற்றிய சில பொய்யான தகவல்களையும் ஊடகங்களில் பரப்பி வருகிறார். இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தை நாடிய விமலுக்கு சாதகமாக சிங்காரவேலனுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதன் மூலம் படத் தயாரிப்பில் ஈடுபடும் நடிகர்களை இமேஜ் என்ற ஒற்றைக் காரணத்தை காட்டி மிரட்டி பணம் சம்பாதித்த சிங்காரவேலனின் பலநாள் மோசடி தற்போது அம்பலமாகி இருக்கிறது. மேலும் இவரால் பாதிக்கப்பட்ட சில நபர்களும் இவர் குறித்து தற்போது புகார் அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News