தமிழ் சினிமாவில் அக்டோபர் 30ஆம் தேதியான இதே நாளில் தீபாவளி ரிலீஸாக சில மறக்க முடியாத, கல்ட் கிளாசிக், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படங்கள் வெளியாகி இருந்தது. வரவிருக்கும் தீபாவளியில், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பெக்கர், சிவகார்த்திகேயனின் அமரன், துல்கரின் லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் வெளியாகிறது.
ரசிகர்கள் எந்த படத்தை பார்ப்பது, எதை விடுவது என்று குழம்பி போயிருக்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் தீபாவளி என்றாலே, ரஜினி vs கமல் தான். அப்படி பட்ட காலத்தில் ரஜினி vs ரஜினி என்று சில படங்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 அன்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், அந்த ஆண்டு இதே நாளில் ரஜினியின் 3 படங்கள் வெளியாகி மூன்றுமே வசூலில் சக்கை போடு போட்டுள்ளது.
வெளியான 3 வேற லெவல் படங்கள்..
1978 தீபாவளி அன்று ரஜினியின் 3 படங்கள் தீபாவளிக்கு வெளியானது. இந்த லிஸ்டில் முதலாவது இருப்பது, தப்பு தாளங்கள். வேற லெவல் ஹிட் அடித்த இந்த படம் ரஜினியின் கேரியரில் அவரை உச்சானி கொம்பிற்கு சென்று நிறுத்திய படம். இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரிதா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் தப்பு தாளங்கள். க்ரைம் ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் ரஜினி, சரிதாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதே நாளில், வெளியான மற்ற ஒரு படம், தாய் மீது சத்தியம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, மோகன் பாபு, என்று பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. இந்த படத்தை சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்தார். அவரது மறைவுக்கு பின் வெளியான இந்த படம் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.
மேலும், இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் படமாக மறைந்த இயக்குநர் ருத்ரய்யா இயக்கத்தில் வெளியான அவள் அப்படித்தான் படமும் இதே நாளில் தான் வெளியானது. 1978 தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தில் ஸ்ரீபிரியா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். படத்தின் கதையை இவர்கள் மூவரை சுற்றியேதான் அமைந்திருக்கும்.
இந்த மூன்றுமே ரஜினிகாந்தின் பெயரை ரசிகர்கள் மனதில் பதிய வைத்த படம். மூன்றுமே வேற லெவல் ஹிட் அடித்தது. இன்றளவும் தொலைக்காட்சியில் இந்த படத்தை போட்டால், பெற்றோர்களும் வயதானவர்களும் டிவி முன்பு அமர்ந்து விடுவார்கள்.