70, 80-களில் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்த ரஜினிகாந்த் – கமல்ஹாசன், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் முதன்முதலில் 1975-ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் இணைந்து நடித்தனர். ஆரம்பகாலத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்து வந்தனர். பின்னர் இருவரும் சமமான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தனர்.
இப்படியாக, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் இருவரும் இணைந்து சுமார் 21 படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் இந்தியில் வெளியான கிராஃப்தார்.
அதன்பிறகு, இருவருமே வியாபார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்ததால், சம்பளம் உள்ளிட்ட தொழில்முறை காரணங்களாலும், நட்பைத் தாண்டிய தனித்தனி திரைப்பயணத்தாலும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை.
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைவது OG ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், ஜென் Z தலைமுறையினரும் இந்தக் காம்போவைத் திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
80-களில் வெற்றிபெற்ற இந்தக் கூட்டணி இப்போதும் அதே வெற்றியைப் பெறுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு!




