ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட வசூலில் மாஸ் காட்டும் நடிகராக ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்து உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அந்த வகையில் அவர் தன் திரைப்படங்களில் ஏராளமான சாதனைகள் படைத்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் 60 வருடமாக யாராலும் முறியடிக்கப்படாத ஒரு சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதாவது 1944ஆம் வருடம் சுந்தர் ராவ் என்பவர் இயக்கிய படம்தான் ஹரிதாஸ். இந்தப் படத்தில் தியாகராஜ பாகவதர், டி ஆர் ராஜகுமாரி, என் எஸ் கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிப்பு ஜாம்பவான்கள் நடித்திருந்தனர்.
கருப்பு வெள்ளையில் வெளியான இந்த திரைப்படம் 784 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் 100 சிறந்த இந்திய திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாக இருக்கிறது. பின்னர் 1946ஆம் ஆண்டு இப்படம் வண்ண திரைப்படமாக மீண்டும் வெளியிடப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் தியாகராஜ பாகவதர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறைக்குச் செல்வதற்கு முன் இப்படத்தில்தான் கடைசியாக நடித்து இருந்தார். இப்படி பல சிறப்புகள் உள்ளடக்கிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படமாகவும் இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் சாதனையை 60 வருடமாக எந்த சினிமாவும் முறியடிக்கவில்லை. இதை நிகழ்த்திக் காட்டியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான். அவரின் நடிப்பில் பி வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் 896 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஒரு சிறந்த திகில் மற்றும் மனோதத்துவ திரைப்படமாக உருவாகி இருந்த இத்திரைப்படம் சாந்தி திரையரங்கில் 896 நாட்கள் ஓடியது.
ஹரிதாஸ் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் கழித்து அந்தப் படத்தின் சாதனையை சந்திரமுகி திரைப்படத்தின் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முறியடித்துள்ளார். இந்த சந்திரமுகி திரைப்படத்தை இப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்.