செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெமினி கணேசன் இடத்தை பிடித்த காதல் மன்னன்.. அந்த மாதிரி படங்கள் தான் இவர் டார்கெட்டே

தமிழ் சினிமாவில் மிக சில நடிகர்கள் மட்டுமே அறிமுகமாகும் முதல் படத்திலேயே அனைவரையும் கவரும் அளவுக்கு பிரபலமடைவார்கள். அந்த வரிசையில் இடம் பெற்ற ஒரு நடிகர் ரவிச்சந்திரன். அந்தக் காலத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்தது.

அதுவும் காதல் படங்கள் என்றாலே ரவிச்சந்திரனை நடிக்க வைக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான காதல் படங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர். இவர் தமிழ் சினிமாவின் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் மன்னனாக வலம் வந்தவர்.

அன்றைய காலகட்டத்தில் நாடக மேடையில் நடித்த நடிகர்கள் தான் அதிகமாக சினிமாவில் நடித்தனர். அப்படி எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்த ஒரு நடிகர் ரவிச்சந்திரன். இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய டைரக்டருடன் அமைந்தது அவருடைய அதிர்ஷ்டம்.

இவர் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அழகான நடனம், வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று பார்த்ததும் பிடிக்கும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இவர் காதல் படங்களையே டார்கெட் செய்து வந்தார். இதனால் மிக விரைவிலேயே எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் மிக எளிதாக இடம் பிடித்தார்.

பல திரைப்படங்களில் காதல் நாயகனாக நடித்த இவர் 70 காலகட்டங்களுக்கு பிறகு குணச்சித்திரம், வில்லன் போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இவரின் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் திரைப்படம் இவரை மற்றொரு கோணத்தில் காட்டியது. தன் கம்பீரக் குரலால் அனைவரையும் கவர்ந்தவர் இன்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

Trending News