J.Baby Movie Review: பெண்ணியம் சார்ந்த படங்கள் வெளிவருவது இப்போது அதிகமாகி விட்டது. அதுவும் மகளிர் தினமான இன்று பெண்மையை போற்றும் வகையிலும் தாய்மையின் எதார்த்தத்தை காட்டும் வகையிலும் வெளியாகி இருக்கிறது j.பேபி. பா ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கி இருக்கும் இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காண்போம்.
பேபியாக வரும் ஊர்வசிக்கு லொள்ளு சபா மாறன், அட்டக்கத்தி தினேஷ் உட்பட ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் ஊர்வசி.
ஆனால் வயதான காரணத்தினால் மறதி ஏற்படுவது, சில சமயங்களில் குழந்தை தனமாக நடந்து கொள்வது என அவருடைய போக்கு கொஞ்சம் வில்லங்கத்தை ஏற்படுகிறது. இதனால் எரிச்சலாகும் பிள்ளைகள் அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு அனைவரிடமும் பாசத்துடன் நடந்து கொள்ளும் ஊர்வசி ஒரு கட்டத்தில் யாருக்கும் தன் மேல் பாசம் இல்லை என அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.
கால் போன போக்கில் கொல்கத்தா பக்கம் செல்லும் அவர் பற்றி பிள்ளைகளுக்கு தகவல் கிடைக்கிறது. குடும்பப் பிரச்சினையால் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும் தாயைத் தேடிச் செல்லும் மாறன், தினேஷ் இருவரும் அவரை கண்டுபிடித்தார்களா? ஊர்வசியின் நிலை என்ன? பிள்ளைகளுடன் அவர் சென்றாரா? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.
உண்மை சம்பவம் என முதலிலேயே தெரியப்படுத்தி விட்டதால் படத்தில் லாஜிக் எதையும் நாம் பார்க்க முடியாது. அதே போல் கதையின் ஓட்டத்தில் காட்டப்படும் கேரக்டர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். இதில் நடிப்பு ராட்சசியான ஊர்வசி தான் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி இருக்கிறார்.
காமெடியில் தொடங்கி சென்டிமென்ட் வரை அனைத்தும் எனக்கு கைவந்த கலை என இவர் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் நிரூபித்து வருகிறார். அதிலும் இப்படத்தில் அவருடைய ஒவ்வொரு காட்சியும் பிரம்மிக்க வைக்கிறது. அதை பார்க்கும் போது எப்படிப்பட்ட ஒரு நடிகை நமக்கு கிடைத்திருக்கிறார் என்ற பெருமையும் வந்து ஒட்டிக் கொள்கிறது.
அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது அதற்கு இவர் உயிர் கொடுத்தாரா? என யோசிக்க வைத்துள்ளார். அதிலும் ஞாபக மறதியால் இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் வகையில் இருக்கிறது. அதே சமயம் வயதானவர்கள் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப செய்வது பேசுவது அனைத்தும் பிள்ளைகளுக்கு எரிச்சலாக இருக்கும்.
ஆனால் அதற்கு வயது ஒரு காரணம் என்பதை இப்படம் எதார்த்தத்தின் உச்சமாக காட்டி இருக்கிறது. அதேபோல் இருக்கும்போது அம்மாவின் அருமை தெரியாது என்பதையும் நெத்திப்பொட்டில் அடித்தார் போல் சொல்லி இருக்கிறார் இயக்குனர். இப்படி படத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் சில இடங்களில் நாடகத் தன்மையை உணர முடிகிறது.
ஆனால் அதையெல்லாம் தாண்டி நிஜத்தில் தொலைந்து போன அம்மாவை கண்டுபிடித்த அதே நபரை படத்திலும் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. மேலும் கதைக்கு தேவையான பின்னணி இசையும், அட்டகத்தி தினேஷ் மற்றும் மாறன் ஆகியோரின் நடிப்பும் பலம் சேர்த்துள்ளது. ஆக மொத்தம் உண்மை சம்பவத்தை அழகாக கொடுத்து கண்கலங்க வைத்துள்ளார் இயக்குனர்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3 / 5