Jawan Movie Review- 4 வருட உழைப்பு, அட்லி-ஷாருக்கான் கூட்டணி ஜெயிக்குமா? மிரட்டி விட்ட ஜவான் பட முழு விமர்சனம்

Jawan Movie Review: இறுதியாக பலரும் எதிர்பார்த்து வந்த ஜவான் இன்று ஆரவாரத்துடன் வெளியாகி இருக்கிறது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

கதைப்படி ஷாருக்கான் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் வருகிறார். அதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் மகன் சமுதாயத்தில் நடக்கும் தப்பை தட்டி கேட்கிறார். அதற்காக ஒரு தனிப்படை அமைத்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் கொடுக்கிறார். அவருக்கு அப்பா ஷாருக்கான் உதவுகிறார்.

அதில் ஆயுத டீலராக வரும் விஜய் சேதுபதிக்கும், போலீசுக்கும் நடக்கும் மோதல், இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை. வழக்கமாக நாம் பார்த்து சலித்து போன கதை தான் என்றாலும் அட்லி அதை கொடுத்திருக்கும் விதமும், பிரம்மாண்டமும் சபாஷ் போட வைத்திருக்கிறது.

அதிலும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார். எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு அவர் இதில் பல கெட்டப்புகளில் வருவது நிச்சயம் வேற லெவல் சர்ப்ரைஸ் தான். அவருக்கு இணையாக வயதான தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் வழக்கம் போல மிரள வைத்திருக்கிறது.

அதே போன்று நர்மதா என்னும் கதாபாத்திரத்தில் வரும் நயன்தாராவும் தன்னுடைய பாலிவுட் என்ட்ரியை அசத்தலாக கொடுத்திருக்கிறார். இப்படி படம் முழுக்க ரசிகர்களுக்கு தேவையான பல விஷயங்கள் நிரம்பி வழிகிறது. அதிலும் தீபிகா படுகோன் வரும் காட்சிகள் கொண்டாட வைத்திருக்கிறது.

மேலும் ஷாருக்கானின் அறிமுகம், ஹைஜாக், இடைவேளை என ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கிறது. இப்படி படத்தில் ரசிக்கும் படியான பல நிறைகள் இருந்தாலும் பின்னணி இசை கொஞ்சம் தடுமாறி இருக்கிறது. அதனாலேயே ஐயோடா பாடலைத் தவிர வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை. இருந்தாலும் படம் ரசிகர்களுக்கு ஒரு சரவெடியாகத்தான் இருக்கிறது. ஆக மொத்தம் ஜவான்-சர்ப்ரைஸ்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5