தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. வரிசையாக முன்னணி நடிகர்கள் பலரும் தெலுங்கு இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருக்கும் தனுசுக்கு இந்த படம் எந்த அளவுக்கு கை கொடுத்திருக்கிறது என்பதை இங்கு ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
தனியார் மற்றும் அரசு பள்ளிகளின் தரம் பற்றியும் படிப்பை எந்த அளவுக்கு வியாபாரம் ஆக்குகிறார்கள் என்பதை பற்றியும் கூறியிருக்கும் இந்த திரைப்படத்தின் மையக்கரு ரொம்பவே அழுத்தமானது தான். ஆனால் அதை இயக்குனர் கொடுத்திருக்கும் விதம்தான் நெருடலை கொடுக்கிறது. கதைப்படி அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக தனியார் பள்ளி சங்கங்கள் உதவி செய்ய முன் வருகிறது.
அதன்படி சமுத்திரகனியின் பள்ளியில் வேலை பார்க்கும் தனுஷ் சென்னை ஆந்திரா பார்டரில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அப்போது அங்கு இருக்கும் மாணவர்களை அவர் திறமையானவர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் அப்படி மட்டும் நடந்து விட்டால் தனியார் பள்ளிகளின் பெயர் கெட்டுப் போய்விடும் என்பதால் அவருக்கு பல தடங்கல்கள் வருகிறது.
அதில் கல்வியை வியாபாரமாக்கும் நோக்குடன் செயல்படும் சமுத்திரக்கனி பல வில்லத்தனங்களை தனுஷுக்கு எதிராக செய்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இப்படி சமுதாயத்தில் நடக்கும் முக்கிய பிரச்சினை கையில் எடுத்திருக்கும் இந்த படத்தை தனுஷ் ஒருவர் மட்டுமே தாங்கிப் பிடித்து நிற்கிறார்.
அதற்கு அடுத்தபடியாக சமுத்திரகனி வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். மேலும் டீச்சராக வரும் சம்யுக்தா தனுஷின் மேல் காதல் வயப்படுவது என தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். மேலும் ஜி வி பிரகாஷ் இசையில் வா வாத்தி என்ற பாடல் ரசிகர்களின் மனதை மயக்குகிறது. இப்படி படத்தில் சில பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் அதிக அளவு தெலுங்கு வாடை வீசுவதை தவிர்த்து இருக்கலாம்.
தெலுங்கு இயக்குனர் தமிழுக்கு வருகிறார் என்றால் தமிழ் மக்களின் ரசனையையும் யோசித்து செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் தெலுங்கு படத்திற்குரிய விஷயங்கள் இருப்பது ரசிகர்களை கதையோடு ஒன்ற விடாமல் செய்துவிடுகிறது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல தெலுங்கு நடிகர்கள் இதில் நடித்திருப்பதும் இதற்கு முக்கிய காரணம்.
ஆக இயக்குனர் மொத்தம் படிப்பு என்ற ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி அனைவருக்கும் கிளாஸ் எடுத்திருக்கிறார். அதனாலேயே சில காட்சிகள் வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியரின் அறிவுரையை கேட்கும் மனநிலையை கொடுக்கிறது. அந்த வகையில் படத்தை தமிழ் ஆடியன்ஸின் ரசனைக்கேற்ப கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனிமேலாவது தனுஷ் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு முன் தமிழ் ரசிகர்களை பற்றியும் யோசிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.