காடுகளை கட்டி ஆண்ட வீரப்பன் கதையை அவரே சொன்னா எப்படி இருக்கும்?. கூச முனுசாமி வீரப்பன் முழு விமர்சனம்

Koose munisamy veerappan movie story review: சந்தன கடத்தல் வீரப்பனை பற்றிய கதைகள் இதுவரை தமிழ் சினிமாவில் டிசைன் டிசைனாக வந்திருக்கிறது. வீரப்பன் தரப்பில் இருந்து ஒரு கதை, காவல்துறை தரப்பிலிருந்து, பத்திரிகையாளர் தரப்பிலிருந்து என வீரப்பனுக்காக விரித்த கற்பனை உலகம் ஏராளம். ஆனால் தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் உள்ள காடுகளை கட்டி ஆண்ட வீரப்பனின் கதையை அவரே சொன்னால் எப்படி இருக்கும் என்பதை, இப்போது கூச முனுசாமி வீரப்பன் என்ற வெப் சீரிஸ் ஜீ5ல் வெளியாகியுள்ளதில் பார்க்க முடியும்.

இந்த ஆவணப்படம் முழுவதும் 1993 முதல் 1996ல் வீரப்பனை நேரடியாக பேட்டி எடுக்க காட்டுக்குள் சென்ற நக்கீரன் பத்திரிக்கையில் பதிவு செய்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு கதையை விவரிக்கின்றனர். இதனால் இந்த டாக்குமென்ட்ரி படம் வழக்கமான ஆவண படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது.

முதல் சீசனில் இருக்கும் ஆறு எபிசோடும் ஒரு கதையை விவரிக்கிறது. இதில் வீரப்பனின் தொடக்க காலம், அவரது முதல் கொலை, சீனிவாசன் கொலை, சிறப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் படுகாயம், அப்பாவி மக்கள் சித்திரவதை முகாம்கள், காவலர்கள் செய்த சித்திரவதை, போலீஸ்காரர்களுக்கும் வீரப்பனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களின் நிலை, வீரப்பனின் அரசியல் ஆர்வம் என ஆறு எபிசோடுகளும் இந்த ஆறு கதைகளை விவரிக்கிறது.

இதில் வீரப்பனின் வாழ்க்கையை அவரே தனது சொந்த குரலில் பேசுவது, சுவாரசியத்தை கூட்டியது. அவ்வளவு சுலபமாக யாராலும் செல்ல முடியாத காட்டுக்குள் லண்டன் பிபிசி செய்தியை தினம்தோறும் கேட்பது தொடங்கி, உளவாளிகளை வைத்திருப்பது, விலங்குகளின் குரல்களை நகலெடுப்பது, அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசியல் கருத்துக்களில் இருந்த கூர்மத்தன்மை என பல விஷயங்களின் மூலம் ஒவ்வொரு காட்சிகளையும் விவரிக்கும் போது தொய்வை ஏற்படுத்தாமல் ஆர்வத்தைக் கிளப்புகின்றனர்.

மேலும் வீரப்பனின் காணொளி இந்த ஆவணப்படம் முழுவதும் நிறைந்துள்ளது. அதிலும் 4வது எபிசோட் பதைபதைக்க வைக்கிறது. மலைவாழ் மக்களின் மீது காவல்துறையினர் நிகழ்த்திய கொடூரமான தாக்குதலில் மட்டும் வீரப்பனின் காணொளிகள் இல்லாமல் நகர்கிறது. மனதை ரணமாக்கும் இந்த எபிசோட் மட்டும் நிறைய சர்ச்சைகளை கிளப்பியது. இதன் மூலம் அவர்களுக்கு இழப்பீடு கிடைத்தால் சந்தோஷம்.

காவல்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் வீரப்பனின் 1000 ஆடுகளை திருடி இருக்கிறார். இந்த இடத்தில் ஊர்காரர் ஒருவர் வீரப்பனின் அதே 1000 ஆடுகள் திருடப்பட்டது உண்மைதான் என வாக்குமூலம் அளித்து உறுதிப்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதுக்கு தான் வீரப்பன், ‘காசு கொடுத்து ஆடு தின்னா நான் எதுக்கு கன்னிவெடி வைக்கிறேன்’ என சொல்கிறார். இதில் மக்கள் தான் மத்தளம் போல் போலீசுக்கும் வீரப்பனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு சித்திரவதைகளை அனுபவித்ததால் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் செய்த செயல்களே வினையாய் முடிந்தது.

இதற்கிடையில் நக்கீரன் கோபால், திரைக்கவிஞர் ரோகினி, நிபுணர் சுப்பு என பலரும் இந்த ஆவணப்படத்தில் வீரப்பனை குறித்து விவரிக்கின்றனர். அது மட்டுமல்ல முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த விமர்சனமும், 1996 தேர்தலில் வீரப்பன் ஏற்படுத்திய தாக்கம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் என வீரப்பன் அனல் பறக்கும் அளவிற்கு அரசியல் பேசியிருக்கிறார். ‘நான் பிரதமரா வருவேன், ஏன் என்னால முடியாதா? வந்து வச்சிக்கிறேன். மக்கள் எனக்கு ஓட்டு போடுவான், என்ன அவ்வளவு சாதாரணமா நினைச்சுக்காத’ என அவர் பேசும் காட்சிகளில் கூடுதல் பரபரப்பு ஏற்படுத்தினார்.

என்னதான் இது ஆவண படமாக இருந்தாலும் சினிமாவிற்கு தேவையான முழு உழைப்பையும் படக் குழு கொடுத்திருக்கிறது. வீரப்பனை ஒரு ஹீரோவாக காட்டினாலும் இருதரப்பிலும் தவறுகளை சுட்டி காட்டினர். இந்த ஆவணப்படத்தில் ஹைலைட்டாக கர்நாடக தரப்பிலிருந்து ஒரு பத்திரிக்கையாளர் பேசுகிறார்.

பொதுவாக தியேட்டரில் வெளியாகும் படங்களில் தான் சென்சார் பிரச்சனைக்காக சில வார்த்தைகள் மியூட் செய்யப்படும். ஆனால் காவல் அதிகாரி தேவாரம் குறித்த வசனங்களிலும், சந்தன கடத்தல் ஏற்றுமதி செய்ய உதவிய சென்னை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரையும் வெளிப்படையாக சொல்லாமல் மியூட் செய்யப்பட்டது. இதை படக்குழு அரசியல் பிரச்சினைகள் காரணமாக தான் செய்திருக்கும்.

வீரப்பன் இவ்வளவு பேசி இருக்கிறாரா! இந்தக் காணொளி வெளிவருவதற்கு எத்தனை வருடம் ஆயிருக்கிறது. வீரப்பனின் ஒட்டுமொத்த கதையையும் இதில் சொல்லவில்லை. முதல் சீசனில் இரண்டாவது சீசனுக்கான அறிவிப்போடு முடிகிறது. முதல் சீசனை இன்ட்ரஸ்டிங்காக கொடுத்ததால், 2வது சீசனும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் என்னதான் வீரப்பன் தன்னுடைய கதையைப் பற்றி கூறினாலும் அது இருதரப்பு நியாயங்களே தவிர அவை மட்டும் ஒட்டுமொத்த வரலாறாகாது.