பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் மற்றும் பலர் நடிப்பில் உருவான லிகர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தற்போது நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த படம் குறித்து தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தற்போது வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

அதில் பல ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு ஜீரோ ரேட்டிங் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பூரி ஜெகன்நாத்தை நம்பி தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது. அதிலும் படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளை தவிர மற்ற அனைத்தும் படு மொக்கையாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளது.

குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா அதிக அளவு உழைப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் படத்தை பார்க்கும் பொழுது அவரின் அந்த கடின உழைப்பு குப்பைக்கு சென்று விட்டதாக ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் தெலுங்கு மொழியிலேயே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஹிந்தி திரையுலகம் அவருக்கு ஒர்க் அவுட் ஆகாது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். இனிமேலாவது அவர் பிரம்மாண்டத்தை பார்க்காமல் கதைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுதான் அவர்களின் கருத்தாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் படத்தின் ஆரம்பக் காட்சியே ஹீரோ எனக்கு கதை சொல்லத் தெரியாது என்று சொல்வது போன்று தொடங்குகிறது. அது முற்றிலும் உண்மை என்று ரசிகர்கள் லிகர் படம் குறித்து பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். ஆக மொத்தம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பூரி ஜெகன்நாத், விஜய் தேவரகொண்டாவின் கூட்டணி தோல்வியில் முடிந்துள்ளது.
