அதர்வாவை திரையில் பார்த்தே பல வருடங்களான நிலையில் தற்போது மத்தகம் என்ற வெப் தொடர் மூலம் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் ஸ்கிரீன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இந்த தொடர் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய அதர்வா இந்த தொடரிலும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக நிகிலா நடித்துள்ளார். ஜெய் பீம், குட் நைட் போன்ற படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர் தான் மணிகண்டன். அதுவும் மோட்டார் மோகனாக அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது.
இவர் இதுவரை நடித்திடாத வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இரவு ரோந்து பணிக்காக அதர்வா சுற்றிக் கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் விபத்துக்கு உள்ளாகிறது. அதில் பிரபல ரவுடியின் பிறந்த நாளுக்காக மொத்த ரவுடி கூட்டமும் பங்கு பெற இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
அதாவது படாளம் சேகர் என்ற தாதாவின் பிறந்த நாள் தான் அது. அந்த கதாபாத்திரத்தில் தான் மணிகண்டன் நடித்திருக்கிறார். ஏற்கனவே போலீசாரால் இறந்து விட்டதாக கருதப்படும் இந்த தாதா வெளி உலகத்திற்கு தெரியாமல் பல வேலைகளை செய்கிறார். மேலும் தனது பிறந்த நாள் அன்று ஒட்டுமொத்த ரவுடியையும் ஒரே இடத்திற்கு கூட்டுகிறார்.
இதன் மூலம் மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை அதர்வா உணருகிறார். இதைத்தொடர்ந்து அந்த ரவுடிகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மத்தகம் வெப் தொடரின் கதை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது வித்தியாசத்தை காட்டி மேலும் மெருகேற்றி வருகிறார் மணிகண்டன்.
அதேபோல் குடும்ப தலைவனாக மட்டுமல்லாமல் நேர்மையான காவல் அதிகாரியாகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அதர்வா. மேலும் கதாநாயகி நிகிலாவுக்கு ஸ்கோப் குறைவு. படத்தில் ஒவ்வொருவரின் அறிமுகத்தை சுவாரசியமாக கொடுத்திருந்தார் இயக்குனர். ஆனால் ஓவர் பில்டப்பால் சில இடங்களில் இயக்குனர் கோட்டை விட்டுவிட்டார். ஆகையால் மத்தகம் அதர்வாவுக்கு கைகொடுக்குமா என்பது சந்தேகம்தான்.