Por Thozhil: வினோத் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா மற்றும் மறைந்த நடிகர் சரத்பாபு ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டைப் பெற்று வரும் படம் போர் தொழில். சீரியல் கில்லர் என்ற உடன் நமக்கு மனதில் சிகப்பு ரோஜாக்கள், நூறாவது நாள், ராட்சசன் போன்ற படங்களில் சாயல் இருக்குமோ என்ற எண்ணம் கண்டிப்பாக வரும்.
ஆனால் அவற்றையெல்லாம் சற்று ஓரம்கட்டி விட்டு போர் தொழில் படத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தி பார்த்தால் உங்களை வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்று விடும். படத்தின் ஆரம்பம் முதலே யாரும் துளியும் கணிக்க முடியாத காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குனர். படத்திற்கான வெற்றி கதை எழுதும்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
போர் தொழில் படம் முழுக்க திருச்சியை சுற்றி தான். எந்த தடயமும் இன்றி ஒரு பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட உள்ளார். அதை போலீசார் விசாரணை செய்யும் போது இதே போன்று முன்பு அடுக்கடுக்கான கொலைகள் நடந்திருப்பது தெரிய வருகிறது.
இதைப்பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் இந்த வழக்கை விசாரிப்பதில் திணறுகின்றனர். அப்போதுதான் இந்த வழக்கு சிபிசிஐடி லோகநாதன் அதாவது சரத்குமார் கைவசம் வருகிறது. அந்த சமயத்தில் இந்த வழக்கில் சரத்குமாருக்கு உதவியாளராக புதிதாக போஸ்டிங்கில் வந்துள்ள பிரகாஷ் அதாவது அசோக் செல்வன் களம் இறங்குகிறார்.
சரத்குமார் தனக்கு இருக்கும் அனுபவத்தின் மூலம் சீரியல் கில்லர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அசோக் செல்வன் தனது புத்தக அறிவின் மூலம் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இருவரும் இணைந்து கடைசியில் கொலையாளியை கண்டுபிடித்தார்களா, கொலைக்கான காரணம் என்ன என்பது தான் போர் தொழில்.
மேலும் படத்தின் முதல் பாதியில் இயக்குனர் சஸ்பென்சுகளை உடைத்தாலும், இரண்டாம் பாதியும் நன்றாகத்தான் அமைந்துள்ளது. படத்தைப் பார்த்து கண்டிப்பாக ஒரு வாரம் வரையிலாவது அந்த காட்சிகள் மனசில் நிற்கும்படி ஒளிவுபதிவு செய்துள்ளார் கலைச்செல்வன். அசோக் செல்வன், சரத்குமார் என இருவருமே தங்களுக்கான ஸ்கோர் அடித்துள்ளனர். ராட்சசனுக்கு பின் இப்படம் தமிழ் சினிமாவில் மிரட்டும் சீரியல் கில்லர் படமாக அமைந்துள்ளது. போர் தொழில் படுஜோராக இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங் :4/5