Animal Movie Review: 3.21 மணி நேரம் சூடு தாங்கியதா ரன்வீர் கபூரின் அனிமல்.? ஜவானை மிஞ்சினாரா முழு விமர்சனம்

Animal Movie Review: அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தின் மூலம் 2k கிட்சுகளை வளைத்து போட்ட சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் படம் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அணில் கபூர், பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம், இன்று ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. ரசிகர்களின் பார்வையில் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

அனிமல் படம் முழு விமர்சனம்

ரன்பீர் கபூர் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். அவருடைய சினிமா கேரியரில் இந்த படத்தில் தான் முதன் முதலில் கேங்ஸ்டர் ஆக நடித்திருக்கிறார். ரன்பீர் கபூர் அறிமுகமான பிரேமில் இருந்து படம் முழுக்க அவரை தவிர, வேறு யாரையும் பார்க்க முடியாத அளவிற்கு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அனிமல் படம் முழுக்க அப்பா மற்றும் மகனுக்கு இடையே நடந்த பாச போராட்டம் மற்றும் பழிவாங்கும் கதை தான். இந்தியில் வெளியான கபி குஷி கபி கம் படத்தின் அடல்ட் வெர்ஷன் என்று கூட ஒரு சில ரசிகர்கள் இந்த படத்தை பற்றி சொல்லி இருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி முழுக்க, ரன்பீர் கபூர் மற்றும் அவருடைய அப்பா அணில் கபூருக்கு இடையேயான விஷயங்கள், ராஷ்மிகா மந்தனா உடனான காதல் இவற்றை வைத்து காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவுக்கு வழக்கமான கதாநாயகிகளின் கேரக்டர் தான். பெரிதாக சொல்லும் அளவுக்கு அவர் ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை. அணில் கபூர் இந்தி சினிமா உலகின் சீனியர் நடிகர் என்பதால் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாசம், கோபம் என முரண்பாடான உணர்ச்சிகளை சரியான அளவில் காட்டியிருக்கிறார்.

படத்தின் இன்டர்வல் காட்சிக்கு முன்னால் வரும் ஆக்சன் சீன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களில் இப்படி ஒரு இன்டெர்வல் பிளாக் வைத்ததே கிடையாது என பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் படத்திற்கு பின்னணி இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாப்பா மேரி ஜான், ஹுவா மைன், அர்ஜன் வைலி என்ற மூன்று பாடல்களுமே கதையோடு ஒன்றி போய் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதி கொடுத்த விறுவிறுப்பை இரண்டாம் பாதி கொடுக்கவில்லை. இது மைனஸ் ஆக இந்த படத்திற்கு அமைந்துவிட்டது. அப்பா மற்றும் மகனுக்கு இடையே இருக்கும் உரசல்களுக்கு இப்படி ஒரு வன்முறை தேவையா என படம் யோசிக்க வைத்திருக்கிறது. படம் முழுக்க வரும் வன்முறை மற்றும் ரத்த காட்சிகள் அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பான் இந்தியா மூவி என்ற முறையில் இந்த படம் தமிழ் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம்தான்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5/5

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →