இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முக திறமையோடு கலக்கி வரும் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த கடந்த சில படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்து மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்திருந்த அவருக்கு காரி திரைப்படம் அசத்தல் கம் பேக் கொடுத்திருக்கிறது.

ஹேமந்த் இயக்கத்தில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் இன்று வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களால் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகிறது. ஆடுகளம் நரேன், பார்வதி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தின் மூலம் சசிகுமார் மீண்டும் தன்னை நிரூபித்து இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு கிராமத்து கதையில் அவரை பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஒரு அழுத்தமான திரைக்கதையை ரசிகர்கள் கவரும் வகையில் கொடுத்திருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சசிகுமார், அம்மு அபிராமி இருவரும் கதைக்கு பக்கபலமாக இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு காட்சிகள் அனைத்தும் அனல் பறக்கிறது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் முக்கிய கருத்தை ஆணித்தரமாக சொல்லி இருக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் பல இடங்களில் கண்கலங்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஆக மொத்தம் இந்த திரைப்படம் சசிகுமாருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.
