Conjuring Kannappan Movie Review- ரெக்கையை பிடுங்கி பேயிடம் சிக்கும் சதீஷ்.. கான்ஜுரிங் கண்ணப்பன் மிரட்டியதா.? முழு விமர்சனம்

Conjuring Kannappan Movie Review: காமெடி நடிகர்கள் அனைவரும் இப்போது ஹீரோ அவதாரம் எடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் கதாநாயகனாக பதவி உயர்வு பெற்றிருக்கும் சதீஷ் நடிப்பில் உருவான கான்ஜுரிங் கண்ணப்பன் இன்று வெளியாகி உள்ளது. செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ரெடிங் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விடிவி கணேஷ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம். அதன்படி கேம் டிசைன் செய்யும் வேலையை தேடிக் கொண்டிருக்கும் சதீஷ் கைக்கு அரிய வகையான பொருள் ஒன்று கிடைக்கிறது. தன் வீட்டு கிணற்றிலிருந்து அந்த பொருளை எடுக்கும் சதீஷ் அதில் இருக்கும் ரெக்கையை பிடுங்குகிறார்.

அதிலிருந்தே அவர் தூங்கும் போது பேயிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுவது போல் கனவு வருகிறது. அந்த கனவு உலகத்தில் சிக்கிக் கொள்ளும் சதீஷ் அதில் இறந்து விட்டால் நிஜ வாழ்க்கையிலும் இறந்து விடுவார். அவரைப் போலவே குடும்பத்தினரிலிருந்து உறவினர்கள் வரை அனைவரும் இறக்கையை பிடுங்கி மாட்டிக் கொள்கிறார்கள்.

அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அந்த கனவு உலகத்தின் பின்னணி என்ன? என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபேண்டஸி முறையில் காமெடி மற்றும் ஹாரர் கலந்து உருவாகி இருக்கும் இப்படம் வழக்கமான பாணியில் தான் இருக்கிறது. ஆனால் படத்தை ஆரம்பித்த விதத்தில் இயக்குனரை பாராட்டலாம்.

ஆனால் அதை அடுத்து தேவையில்லாத காட்சிகள், சிரிப்பே வராத நகைச்சுவை என கொஞ்சம் சறுக்கி இருக்கிறார். சதீஷ் வழக்கமான நடிப்பை கொடுத்தாலும் ஹீரோ என்ற உணர்வை கொடுக்கவில்லை. அதேபோல் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன் ஆகிய கதாபாத்திரங்கள் ஓகே ரகமாகத்தான் இருக்கிறது.

மேலும் பேய் இல்லாமல் கூட பேய் படங்கள் வருகின்றன. ஆனால் ஆனந்தராஜ் இல்லாமல் ஹாரர் படங்கள் வருவதில்லை. அப்படித்தான் இந்த படத்திலும் அவர் தன்னுடைய பங்கை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.

இப்படி சில இடங்களில் சறுக்கி இருக்கும் படத்தை யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தூக்கி நிறுத்தி இருக்கிறது. அதேபோன்று ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. இருப்பினும் சுவாரஸ்யம் மற்றும் வித்தியாசத்திற்கு ஏற்ற காட்சிகள் இல்லாததால் இந்த கான்செப்ட் சிறந்த முயற்சியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் கான்ஜுரிங் கண்ணப்பன்-சுமார் ரகம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5