சினம் அருண் விஜய்க்கு வெற்றியா, தோல்வியா.? முழு விமர்சனம்

அருண் விஜய் நடிப்பில் சினம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சில தாமதங்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்தை குமரவேலன் இயக்கியிருக்கிறார்.

க்ரைம் மற்றும் திரில்லர் பாணியில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சினம் திரைப்படமும் ஒரு குற்ற பின்னணி கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை சாமானிய மக்கள் தைரியமாக எதிர்த்து போராட வேண்டும் என்ற கருத்தை இப்படம் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறது. கதைப்படி அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். அவருடைய மனைவி பாலக் லால்வானி அம்மா வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் கொலை செய்யப்படுகிறார்.

அவருடைய உடலுக்கு அருகே மற்றொரு ஆணின் உடலும் கண்டெடுக்கப்படுகிறது. அதனால் இது கள்ளக்காதல் என்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அருண் விஜய் மேல் தீராத வெறுப்பில் இருக்கும் இன்ஸ்பெக்டர் தான் இப்படி ஒரு விஷயத்தை செய்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் அருண் விஜய் அவரை தாக்குகிறார்.

அதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்படும் அருண் விஜய் மீண்டும வேலையில் சேர்ந்து தன் மனைவிக்கு என்ன நடந்தது என்பதை பற்றி துப்பறிகிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி கண்டாரா, இல்லையா, உண்மையான குற்றவாளி யார் என்பதுதான் சினம் திரைப்படத்தின் கதை.

கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக அருண் விஜய் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். மனைவியின் இறப்பினால் அவர் படும் வேதனை, அதை கண்டறிய அவர் எடுக்கும் முயற்சி, கோபம் என்று அத்தனை உணர்ச்சிகளையும் அவர் மிகவும் எதார்த்தமாக காட்டியுள்ளார். வழக்கமான சினிமா போலீசாக இல்லாமல் அவருடைய கதாபாத்திரம் எதார்த்தமாக பயணிப்பது சிறப்பு. அதிலும் இறுதி காட்சி மிகப் பெரிய டுவிஸ்ட்டுடன் அமைந்துள்ளது. இந்த வகையில் அருண் விஜய் ஒட்டு மொத்த படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார். இது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

அதை தவிர சில காட்சிகள் சினிமாத்தனதுடன் இருக்கின்றது. மேலும் குறைவான கதாபாத்திரங்கள் இருப்பதும் நெருடலை கொடுக்கிறது. அதை தவிர்த்து வழக்கமான ஒரு திரை கதையை இயக்குனர் மிகவும் இயல்பாக காட்டியிருப்பது சிறப்பு. அந்த வகையில் சினம் திரைப்படம் ஆக்ரோஷத்தின் வெளிப்பாடு.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5