PT வாத்தியார் சிங்காரம் சிரிக்க வைத்தாரா.? சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Gangers Movie Review: சுந்தர் சி இயக்கி நடித்துள்ள கேங்கர்ஸ் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் என பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

சத்யா படத்திற்கு இசையமைத்துள்ளார். அரண்மனை 4, மதகஜராஜா என தொடர் ஹிட் படங்களை கொடுத்த சுந்தர்.சி இதன் மூலம் ஹாட்ரிக் அடித்தாரா என்பதை விமர்சனத்தின் வழியாக காண்போம்.

கதைப்படி அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அங்கு ஆசிரியராக பணிபுரியும் கேத்ரின் தெரசா இது பற்றி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்.

அதே ஸ்கூலில் பிடி வாத்தியார் சிங்காரம் கதாபாத்திரத்தில் வடிவேலு வருகிறார். அந்தப் பள்ளியில் புதிதாக வந்து சேர்கிறார் சுந்தர் சி.

கேங்கர்ஸ் படம் எப்படி இருக்கு.?

அப்போது ஊருக்குள் முக்கிய புள்ளிகளாக இருக்கும் மைம் கோபி, அருள்தாஸ் இருவரும் சட்ட விரோதமான செயல்களை செய்கின்றனர். அதற்கு அந்த பள்ளியை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதற்கு எதிராக சுந்தர் சி களமிறங்குகிறார். ஆனால் மறைந்திருந்து எதிரிகளை தாக்குகிறார். அதில் துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் வில்லன்களிடம் வடிவேலு சிக்கிக் கொள்கிறார்.

இப்படி நகரும் கதையில் முக்கிய வில்லனிடம் இருந்து பல கோடி ரூபாயை ஆட்டையை போடுவது தான் சுந்தர் சி டார்கெட். எதற்காக அவர் இவ்வாறு செய்கிறார்? இந்த மோதலில் நடந்தது என்ன? என்பதை காமெடியாக சொல்லி இருக்கிறது இப்படம்.

பொதுவாக சுந்தர் சி படத்தில் லாஜிக் பார்க்க முடியாது. இப்படத்திலும் அதுவே இருக்கிறது. அவருடைய ஸ்டைலில் பாட்டு சண்டை காட்சி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது படம்.

ஆனால் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதில் பயணிக்கிறது படம். முதல் பாதியில் பெரிய அளவில் காமெடி இல்லை.

ஆனால் இரண்டாம் பாதி ரகளையாக இருக்கிறது. வடிவேலு ஒவ்வொரு கெட் அப் போட்டு வரும் காட்சிகளும் வில்லன்களிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் காமெடி என்ஜாய் செய்ய வைக்கிறது. இப்படியாக படம் முழுவதும் ஒரே காமெடி அலப்பறை தான். ஆகமொத்தம் சுந்தர் சி வடிவேலு கூட்டணி வழக்கம் போல இப்படத்திலும் ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5