Mark Antony Movie Review: விஷால் நடிப்பில் இன்று மார்க் ஆண்டனி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ரிலீசுக்கு முன் பல பிரச்சனைகளை சந்தித்த இப்படம் தற்போது தடைகளை தாண்டி வெளியாகி இருக்கிறது.
அதனாலேயே இதற்கான ஒரு ஆர்வமும் இருந்தது. தற்போது இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் மார்க் ஆண்டனி விஷாலுக்கு வெற்றியா, தோல்வியா என்பதை சிறு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
கதைப்படி விஷால் தன் அம்மாவை கொன்றது அப்பா தான் என நினைத்து சிறுவயதிலிருந்தே அவரை வெறுக்கிறார். அதனால் எஸ் ஜே சூர்யாவை தன் அப்பாவாக நினைத்து வாழ்கிறார். அந்த சமயத்தில் தான் அவருக்கு ஒரு டைம் ட்ராவல் மெஷின் கிடைக்கிறது. அதை வைத்து இறந்த காலத்திற்கு செல்கிறார்.
அதில் எஸ் ஜே சூர்யா கெட்டவர் என்றும் தன் அப்பாவை அவர்தான் கொன்றார் என்றும் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை. கொஞ்சம் சயின்ஸ், நிறைய காமெடி என இயக்குனர் திரைக்கதையை விறுவிறுப்பாகவும் அதே சமயம் ரசிக்கும் படியிலும் கொடுத்திருக்கிறார்.
அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் எஸ் ஜே சூர்யா ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமாக ஸ்கோர் செய்து விடுகிறார். அதேபோல் விஷால் கடந்த சில வருடங்களாக தோல்விகளை கொடுத்து சின்னா பின்னமான நிலையில் வெற்றியை கொடுத்தே தீர வேண்டும் என்ற வெறியில் நடித்திருப்பது நன்றாகவே தெரிகிறது.
வழக்கம்போல ஆக்சன் உள்ளிட்ட அனைத்து காட்சிகளிலும் தன் பங்களிப்பை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். அதிலும் சிலுக்கு டான்ஸ், கிளைமாக்ஸ் காட்சியில் விஷாலின் பர்ஃபார்மன்ஸ் போன்ற அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. அதற்கு ஜி.வி பிரகாஷின் இசையும் பலம் சேர்த்துள்ளது.
முதல் பாதி சராசரியாக சென்றாலும் இரண்டாம் பாதி கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது. இதுவே படத்தோடு நம்மை ஒன்ற வைத்து விடுகிறது. சில இடங்களில் கதை மெதுவாக நகர்வது போல் இருந்தாலும் மொத்தத்தில் மார்க் ஆண்டனி பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது. அதற்காகவே படத்தை ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5