திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

5 மொழி, 50 கோடி செலவு செய்த அண்ணாச்சி.. ‘தி லெஜன்ட்’ தாக்கு பிடிப்பாரா.? திரைவிமர்சனம்

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை எடுப்பதற்கு மற்றும் உலகளவில் விளம்பரம் செய்வதற்காக கிட்டத்தட்ட 50 கோடி செலவிட்டு உள்ளனர்.

ஜே டி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி கொட்டி இருக்கும் அண்ணாச்சிக்கு இந்த படம் வெற்றியை கொடுத்ததா என்பதை இங்கு விரிவாக காண்போம்.

கதைப்படி சரவணன் ஒரு விஞ்ஞானியாக இருக்கிறார். அவருடைய நண்பர் ரோபோ சங்கர் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு இன்சுலின் மூலம் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மரணம் அடைந்து விடுகிறார்.

இந்த நிகழ்வு அண்ணாச்சியை ரொம்பவும் பாதிக்கிறது. விஞ்ஞானியாக இருக்கும் அவர் இனி சர்க்கரை வியாதியால் யாரும் உயிரிழக்க கூடாது என்பதற்காக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்குகிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முயற்சி எடுக்கும் அண்ணாச்சியை பார்க்கும் போது ரஜினியின் சிவாஜி படம் தான் நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட இந்த படமும் அதே பாணியில் தான் இருக்கிறது. பிரபு, விவேக், ரோபோ சங்கர், சுமன், ராய் லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் படம் வெகு சுமார் ரகமாக இருப்பது பரிதாபத்திலும் பரிதாபம்.

சினிமா மீதுள்ள ஆசையின் காரணமாக ஹீரோவாக களமிறங்கியுள்ள அண்ணாச்சி பல இடங்களில் ஜீரோவாக தெரிகிறார். அந்த வகையில் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் கூட தியேட்டரையே வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. காசுக்கேற்ற பிரம்மாண்டமும், டெக்னாலஜியும் பாராட்ட வைத்தாலும் அண்ணாச்சி வீணாக காசை செலவழித்து விட்டார் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

அந்த வகையில் இந்த படம் தற்போது ரசிகர்கள் கலாய்த்து தள்ளும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. நன்றாக என்ஜாய் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் தியேட்டருக்கு போகலாம் மற்றபடி கதைக்காக செல்வது வீண் தான். என்னதான் பணம் கொட்டி கிடந்தாலும் நடிப்பை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை அண்ணாச்சி இனியாவது புரிந்து கொண்டால் சரிதான்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 2 / 5

Trending News