புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மதங்களைக் கடந்து மனிதத்தை கொண்டாடிய அயோத்தி.. 10 வருட போரட்டத்திற்கு பின் சசிகுமார் ஜெயித்தாரா?

இயக்குனராக தன் வெற்றியை பதிவு செய்த சசிகுமார் நாடோடிகள், போராளி போன்ற திரைப்படங்கள் மூலம் ஹீரோவாகவும் வெற்றி கண்டார். ஆனால் சமீபகாலமாக அவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளிவந்தாலும் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அப்படி பார்த்தால் கடைசியாக 10 வருடங்களுக்கு முன் வெளிவந்த சுந்தரபாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை என்பது தான் நிதர்சனம்.

ஆனால் அது அனைத்தையும் ஈடுகட்டும் வகையில் தற்போது அயோத்தி திரைப்படத்தின் மூலம் ஒரு தரமான வெற்றியை அவர் ருசித்துள்ளார். மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் உடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் தற்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படத்தின் விமர்சனத்தை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

Also read: யூகிக்க முடியாத சூப்பர் ஹிட் பட கதையில் சசிகுமார்.. சந்தானம் சொன்ன மாதிரி பொங்கலுக்கு வடகறி தான்

கதைப்படி அயோத்தியில் இருந்து புனித யாத்திரைக்காக இந்திக்காரரான பல்ராம் தன் குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு வருகிறார். அப்போது அவரின் அவசரத்தால் அவர்கள் செல்லும் வாடகை கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பல்ராமின் மனைவி மரணம் அடைந்து விடுகிறார். இதனால் நிலைகுலைந்து போன அவர் தன் மனைவியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முற்படுகிறார்.

மேலும் மனைவியின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என்றும் மருத்துவரிடம் சண்டை பிடிக்கிறார். அப்போது டாக்ஸி டிரைவரை பார்க்க அவருடைய நண்பர் சசிகுமார் அங்கு வருகிறார். அப்போது மொழி தெரியாமல் தவிக்கும் இந்திக்கார குடும்பத்திற்காக உதவ முன் வருகிறார். அந்த முயற்சி எந்த அளவுக்கு கைகூடியது என்பதுதான் இந்த படத்தின் கதை.

மதங்களைக் கடந்து மனிதத்தை கொண்டாடும் வகையில் இப்படி ஒரு அழுத்தமான கதையை பதிவு செய்திருக்கும் இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அதிலும் அவர் அறிமுக இயக்குனர் என்பது பெரும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சசிகுமார் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரை ஹீரோ என்று சொல்வதைவிட இந்த கதையின் நாயகன் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

Also read: ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு

அந்த அளவுக்கு அவர் தன்னை முழுவதுமாக இதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய நண்பராக வரும் புகழும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். மேலும் ஆணாதிக்க மனிதராக வரும் யஷ்பால் சர்மா, சடலத்தை விமானத்தில் கொண்டு செல்வதற்காக சசிகுமாருக்கு உதவி செய்யும் துணை கதாபாத்திரங்கள் என ஒவ்வொன்றும் மனதில் நிற்கிறது.

அதிலும் விமான டிக்கெட்டில் ஆரம்பித்து சவப்பெட்டி, மருத்துவமனை ஃபார்மாலிட்டீஸ், விமான நிலையத்தின் விதிமுறைகள் என அனைத்திற்காகவும் சசிகுமார் எடுக்கும் முயற்சியும், இறுதி காட்சியில் அந்த குடும்பத்தை பத்திரமாக வழி அனுப்பும் தருணமும் நெகிழ வைக்கிறது. ஆக மொத்தம் அவர் பத்து வருடங்களுக்கு பிறகு தரமான ஒரு முத்திரையை பதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த அயோத்தி அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: சூழ்நிலை கைதியான சசிகுமார்.. உச்சகட்ட விரக்தியில் படும்பாடு

Trending News