ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

நடிப்பையும் தாண்டி நிஜம் என மக்கள் நம்பிய 10 படங்கள்.. பாசத்தையும், வீரத்தையும் ஊட்டி வளர்த்த சிவாஜி

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் ஆனவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் சிவாஜி தன்னுடைய படங்களில் உடல்மொழி, முகபாவம் என அனைத்தையும் கனகச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பார். அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பராசக்தி : சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பராசக்தி. சிவாஜி தன்னுடைய முதல் படத்திலேயே அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தில் ஒரு பிச்சைக்காரன் போல் பைத்தியம் வேஷமிட்டு
சமூகத்தை சவுக்கால் விளாசுவது போல் இருக்கிற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவாஜி.

வீரபாண்டிய கட்டபொம்மன் : சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். இப்படத்தில் சிவாஜியின் வசனங்களும், சண்டைக்காட்சிகளும் அரங்கையே அதிரச் செய்தது. வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய கட்டபொம்மனை அப்படியே கண்முன் கொண்டு வந்திருந்தார் சிவாஜி. இப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

கர்ணன் : சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், தேவிகா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் கர்ணன். கொடை வள்ளல் என்றே அறியப்பட்ட கர்ணனின் நன்றி உணர்ச்சி, செஞ்சோற்றுக்கடனுக்காக அவனது தியாகங்கள் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சிவாஜி. கர்ணன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்கும் அளவுக்கு இப்படத்தில் அந்த கம்பீரத்துடன் இருந்தார் சிவாஜி.

பாசமலர் : பாசமலர் படத்தில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தனர். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் சிவாஜியும், சாவித்திரியும் அண்ணன், தங்கையாகவே வாழ்ந்திருப்பார்கள். ரசிகர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் மல்கதான் திரையரங்குகளில் இருந்து வெளிவந்தனர்.

வசந்த மாளிகை : சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, வி. எஸ். ராகவன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வசந்த மாளிகை. மிகச்சிறந்த காதல் காவியமான வசந்த மாளிகை படத்தில் தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி.
அதுமட்டுமல்லாமல் சிவாஜி படங்களில் அதிக நாள் ஓடி சாதனை படைத்த படம் என்றால் அது வசந்த மாளிகை.

ராஜபார்ட் ரங்கதுரை : சிவாஜி கணேசன், உஷா நந்தினி, எம். என். நம்பியார், மனோரமா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜபார்ட் ரங்கதுரை. இப்படத்தில் நிமிடத்திற்கு ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தினார் சிவாஜி. பிரசவிக்கப்போகும் தங்கையைப் பார்க்க வரும்படி பணக்காரரின் மருமகனாகிவிட்ட தன் தம்பியை அழைக்கச் செல்லும் போது அங்கு சிவாஜியின் பாட்டும், நடனமும் ரசிகர்களின் பலரது மனதை கனமாக்கியது.

பாலும் பழமும் : சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் பாலும்-பழமும். இப்படத்தில் சிவாஜி பார்வையற்ற போது அவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள். காலத்தால் அழியாத சிவாஜி படங்களில் பாலும் பழமும் படமும் ஒன்று .இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

திருவிளையாடல் : சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் திருவிளையாடல். இப்படத்தில் ஒரு தகப்பனின் கோபம், கண்டிப்பு, பரிதவிப்பு, ஆதங்கம், அன்பு என அனைத்தையும் வெளிகாட்டி இருப்பார் சிவாஜி. அதேபோல் இப்படத்தில் நாகேஷின் நடிப்பு பிரமாதம்.

பாவமன்னிப்பு : சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, தேவிகா, எம் ஆர் ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாவமன்னிப்பு. இப்படத்தில் சிவாஜி ராம் மற்றும் ரஹீமாக நடித்திருந்தார். இப்படத்தில் சிவாஜியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
பாவமன்னிப்பு படம் வெள்ளி விழா கொண்டாடியது.

முதல் மரியாதை : பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல் மரியாதை. இப்படத்தில் மலைச்சாமி ஆக சிவாஜிகணேசன் நடித்து இருந்தார். ஊர் பெரியவருக்கும், பரிசல்காரன் பெண்ணிற்கும் இடையே ஏற்படும் நட்பும் காதலும் மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் சிவாஜியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்கச் செய்தது.

Trending News