சமீபகாலமாக வெளிவரும் வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் இணைந்துள்ள இந்த வதந்தி வெப் தொடரில் எஸ் ஜே சூர்யா எதிர்பார்க்காத அளவிற்கு மிரட்டி இருக்கிறார். புஷ்கர் – காயத்ரி தயாரித்துள்ள இந்த தொடரை கொலைகாரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார்.
லைலா, நாசர், ஸ்மிருதி வெங்கட், புதுமுகம் சஞ்சனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் ஆகியோர் இத்தொடரில் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கதைப்படி கன்னியாகுமரியில் வெலோனி என்ற பெண் சடலமாக கண்டெடுக்கப்படுகிறார். அதிலிருந்து இந்த கதை ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் போன்ற பல மர்மம் முடிச்சுகளை காவல்துறை எப்படி அவிழ்க்கிறது என்பதுதான் இந்த கதை.
Also read: மிரட்டல் எஸ் ஜே சூர்யா, கலக்கல் நந்திதா, மாஸ்டர் பீஸ் செல்வராகவன்.. நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
அமேசான் ப்ரைம் தளத்தில் எட்டு பாகங்களாக வெளிவந்துள்ள இந்த தொடர் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் போலீசாக வரும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பார்ப்பவர்களை மிரட்டி இருக்கிறது. கொலைக்கான ஆதாரத்தை நுணுக்கமாக கண்டுபிடிப்பதிலிருந்து வழக்கை எந்த கோணத்தில் பார்ப்பது, யார் கொலையாளி என்று அவர் கண்டுபிடிப்பது வரை ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்.
மாநாடு திரைப்படத்தில் போலீஸாக மிரட்டிய எஸ் ஜே சூர்யா அதற்கு நேர்மாறாக இந்த கதையில் வித்தியாசமான போலீசாக நடித்திருக்கிறார். கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது, இறுதியில் சஸ்பென்ஸ் உடையும் அந்த காட்சியில் அவர் தனக்கே உரிய பாணியில் மிரட்டி இருப்பது சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் இந்த கதையை அவர் தான் தாங்கிப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக லைலாவின் கதாபாத்திரம் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்றுதான். அதை தொடர்ந்து புதுமுகமாக இருந்தாலும் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா அதிக கவனம் பெறுகிறார். ஒரு அப்பாவி பெண்ணின் மரணத்தை கேலிக்கூத்தாக்கும் ஊடகங்கள் சேனலின் டிஆர்பிக்காக தேவையற்ற வதந்தியை பரப்புவது என பல அழுத்தமான விஷயங்களை இயக்குனர் இத்தொடரில் ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
மேலும் படத்தின் விஷுவல் காட்சிகளும், பின்னணி இசையும் இக்கதைக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இருப்பினும் சில காட்சிகள் ரொம்பவும் மெதுவாக நகர்வது ஆடியன்ஸை பயங்கரமாக சோதித்து இருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த வெப் சீரிஸ் இந்த வருடத்தின் சிறந்த வெப் தொடரில் ஒன்றாக இணைந்து இருக்கிறது. ஆக மொத்தம் இந்த வதந்தி சஸ்பென்ஸ் திரில்லருடன் கூடிய சுவாரஸ்யமாக இருக்கிறது.
Also read: எஸ் ஜே சூர்யாவுக்கு தலைவலியாக வந்த விஷால்.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா