சூரி காமெடி நடிகராக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக மாறினார். இந்தப் படத்தில் அவருடன் நடிந்திருந்தவர் விஷ்ணு விஷால். இருவருக்கும் இது முதல் வெற்றி படமாகும். பின்னர் குள்ளநரி கூட்டம், ஜீவா, வேலை வந்துட்ட வெள்ளைக்காரன் என பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நட்பின் அடிப்படையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோரிடம் தனக்கு நிலம் வாங்கி கொடுக்க கூறி 2 கோடியே 90 லட்சம் பணத்தை சூரி அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் இடம் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார்கள். இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு ஒரு கோடியே 30 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர்.
ஆனால் மீதமுள்ள ஒரு கோடியே 60 லட்சம் பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர் என்று சூரி அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சூரி துணை கமிஷனர் மீனா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.
இந்த விசாரணையை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 406 நம்பிக்கை மோசடி, 420 பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாறு காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்காக பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் கொடுக்க உள்ளனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார். 2 பேரையும் நேரில் வரவழைத்து தனித்தனியாக விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.