ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

நூறாவது படத்துக்கு மாட்டிய விலாங்கு மீன்.. ஜீவா அப்பா போட்ட பிரம்மாண்ட தூண்டில்

ஜீவாவின் அப்பா ஆர்பி சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பல தரமான கதைகளை தயாரித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தயாரித்த பல திரைப்படங்களும் குடும்பங்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

அவர் இதுவரை கிட்டத்தட்ட 99 படங்கள் தயாரித்து இருக்கிறார். அடுத்து அவர் தன்னுடைய நூறாவது படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்காக யாராவது ஒரு பெரிய ஹீரோவை புக் பண்ணலாம் என்று அவர் யோசித்து உள்ளார். அதற்காக அவர் நடிகர் விஜய்யிடம் கூட பேசி இருக்கிறார்.

இப்போது விஜய்க்காக ஒரு கதை தயார் செய்யப்பட்டு அது அவரிடமும் கூறப்பட்டுள்ளது. அந்த கதையை கேட்ட விஜய்யும் ரொம்ப பிடித்து போய் படம் பண்ணுவதற்கு சம்மதித்து இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படம் விஜய்யின் படமாகத் தான் இருக்க போகிறது.

இவர்கள் ஏற்கனவே விஜய்யை வைத்து பூவே உனக்காக, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி போன்ற பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். இவர்களின் கூட்டணியில் கடைசியாக ஜில்லா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த நிறுவனம் அவர்களின் 50வது திரைப்படத்தை ஜீவாவை வைத்து தயாரித்திருந்தனர். அதை தொடர்ந்து தற்போது உருவாக இருக்கும் 100வது திரைப்படம் விஜய்யின் நடிப்பில் பிரமாண்டமாக தயாராக இருக்கிறது.

தற்போது விஜய்யும் சூப்பர் குட் பிலிம்சுக்கு கால்ஷீட் தர சம்மதித்து இருப்பதால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று தான் பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் அவர்களின் 100வது படமான மெர்சல் படத்தை விஜய்யை வைத்து தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News