புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.. லட்டை பூந்தியாக்கிய சம்பவம்

திருப்பதி திருமலை கோயிலில் வழங்கப்படும் லட்டு தயாரிக்கப்படும் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். இவ்விவகாரம் தொடபாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆந்திரம் மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலையில் திருப்பதி வெங்கடாச்சலபதி கோயில் உள்ளது. உலகப் பிரசித்திப் பெற்ற இக்கோயிலில், கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக அதாவது 1715 ஆம் ஆண்டு முதல் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கில் லட்டு பிரசாதம் வழங்கப்படும் நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு புவியார் குறியீடு வழங்கப்பட்டது.

இந்த லட்டு பிரசாதம் மூலம் பல கோடி வருவாய் திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோயிலுக்கு வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்ட நெய்யில் விலங்கு நெய் கலக்கப்பட்டதாக கூறப்பட்டது தொடர்பாக விசாரணை ஆந்திர மாநில அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்தது. இவ்விவகாரத்தில் ஐஜி திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு இந்து அமைப்புகளும், இந்து மத தலைவர்களும் இவ்விவகாரத்தில் போராட்டம் நடத்தினர். திருப்பதி லட்டு விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களுடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இன்று இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது: ”திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பாக ஏன் பொதுவெளியில் பேசப்பட்டது. ஆந்திர மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அக்குழு முடிவை அளிக்கும் முன்பே ஏன் பொதுவெளியில் பேசப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டப்பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்ய கூடாது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததா? கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நெய், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தெளிவுப்படுத்தப்படவில்லை? இதற்கு ஆதாரம் உள்ளதா?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய விவ்வகாரம் ஆந்திர அரசியலில் மட்டுமல்ல, கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஊடகங்களில் பெரும் விவாதரங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று ஆந்திர முதல்வருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News