தற்போது திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் தங்களுக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இதன் மூலம் அவர் ஜெய்பீம் போன்ற சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் திரைப்படங்கள் மற்றும் கடைக்குட்டி சிங்கம் போன்ற குடும்ப திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். அந்த வகையில் இவர் தற்போது ஓ மை டாக் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
அருண் விஜய், அர்ணவ் விஜய், மகிமா நம்பியார், விஜய் குமார், வினய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 21 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
படத்தின் பெயரைப் பார்க்கும் போதே இதில் நாய்க்கு முக்கிய காட்சிகள் இருக்கும் என்பது தெளிவாக இருக்கிறது. அந்த வகையில் இந்தபடம் குழந்தைகளுக்கும், வளர்ப்பு பிராணிகளுக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பை பற்றி எடுத்துக்கூறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் அருண் விஜய்யின் மகன் அர்ணவ் விஜய் தன் தந்தை மற்றும் தாத்தா உடன் இணைந்து இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அந்தவகையில் மூன்று தலைமுறை நடிகர்களையும் இந்த திரைப்படத்தின் மூலம் இணைத்த பெருமை சூர்யா, ஜோதிகாவுக்கு இருக்கிறது.
இந்த டிரெய்லரை வைத்துப் பார்க்கும்போது சூர்யாவின் முந்தைய தயாரிப்பு படமான பசங்க 2 படத்தின் சாயல் தெரிகிறது. குழந்தைகளின் சேட்டையும் அதனால் பெரியவர்கள் அடையும் எரிச்சலும் இதில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
சமீபகாலமாக வில்லத்தனத்தில் மிரட்டி வரும் வினய் இந்த திரைப்படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். டாக்டர், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு வினய் இந்த திரைப்படத்திலும் ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குடும்பங்களை கவரும் வகையில் திரைப்படங்களை எடுத்து வரும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தையும் ஒரு பேமிலி எண்டர்டெயின்மண்ட் படமாக உருவாக்கியிருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.