ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குடி போதை இல்லாமல் சினிமாவில் வாழ்ந்து காட்டிய 9 நடிகர்கள்.. இந்த லிஸ்டை பார்த்தா நம்பற மாதிரி இல்ல

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் சினிமாவின் டீடோட்டலர் என்று சொல்லப்படும் ஒழுக்கமான நடிகர்களை பற்றி காணலாம்.

நம்பியார்: வில்லன் நடிகரான நம்பியார் பல திரைப்படங்களில் மிகவும் மோசமான கொடூரமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் நிஜத்தில் இவர் மிக மிக எளிமையான குணம் கொண்டவர். மேலும் சபரிமலை ஐயப்பன் மீது தீராத பக்தி கொண்டவர். தவறாமல் மாலை அணிந்து அவரைக் காணச் செல்வது வழக்கம். அவர் ஒரு குருசாமி என்பதும் குறிப்பிடத்தக்கது. இறக்கும் வரை எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்த நல்ல மனிதர் அவர்.

அசோகன்: இன்னொரு வில்லன் நடிகரான அசோகன் நல்ல நகைச்சுவை பண்புகள் கொண்டவர். இவரும் பல படங்களில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல நடிகர்களின் துன்பத்தை தக்க நேரத்தில் போக்கியுள்ளார். நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கதாநாயகனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் வின்சென்ட் அசோகனும் பிரபலமான நடிகர் ஆவார்

ஜெய்சங்கர்: தமிழக ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கப்பட்ட ஜெய்சங்கர் நிஜமான ஒரு டீட்டோடேலர். ஆரம்ப காலங்களில் கதாநாயகனாகவும் பின்னர் வில்லனாகவும் நடித்த மிக எளிமையான மனிதர். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஜெய்சங்கர் தனது வாரிசுகளை சினிமாவில் கொண்டு வருவதில் அக்கறை காட்டாதவர். பல இக்கட்டான நிலையில் இருந்தவர்களுக்கு பெரும் அளவு பண உதவி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சிவக்குமார்: நடிகர், ஓவியர், எழுத்தாளர் என்று பல திறமைகளை உள்ளடக்கிய சிவகுமார் அவர்கள் எந்த ஒரு தீய பண்புகளும் இல்லாதவர். வெற்றிலை கூட போட யோசிப்பவர். அவரது இளமைக் காலத்தில் பல நடிகைகள் அவர் மீது காதல் கொண்ட போதும் தன்னை கட்டுக்குள் வைத்திருந்தார். சமீபத்தில் அனுமதியின்றி செல்பி எடுத்த வாலிபரின் செல்போனை தட்டி விட்டதன் மூலம் அதிகம் விமர்சிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரசன்னா: தற்போதைய நடிகர்களில் பிரசன்னாவை நிச்சயமாக டீடோட்டலர் என்று குறிப்பிடலாம். இதுவரை மனிதர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர். மேலும் தான் காதலித்த சினேகாவை கைபிடித்து இன்று சிறப்பான கணவராக வாழ்ந்து வருகிறார். அவருக்கு சீக்கிரம் நல்லதொரு திருப்புமுனையான திரைப்படம் அமையும் என்று வாழ்த்தலாம்.

சந்தானம்: லொள்ளு சபா மூலம் புகழ்பெற்று தொலைக்காட்சியிலிருந்து திரைப்படங்களுக்கு முன்னேறியவர் சந்தானம். ஆரம்ப காலங்களில் நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களை பிஸியாக இருந்தவர் தற்போது கதாநாயகனாக மட்டுமே நடிக்க வருகிறார். சந்தானம் இதுவரை எந்த ஒரு பெரிய குற்றசாட்டிலும் சிக்காதவர். அவருடன் லொள்ளுசபாவில் நடித்த நடிகர்களுக்கு போதிய அளவு வாய்ப்பு வழங்கி வருகிறார்.

ஜீவா: தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகனான ஜீவா தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக விளங்குகிறார். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ஜீவாமீது இதுவரை எந்த ஒரு பெரிய கிசுகிசுவோ புகாரோ வந்ததில்லை. தன்னுடைய படங்கள், தன் குடும்பம் என்று எப்போதும் நேர்மையான வாழ்க்கை வாழ்கிறார்.

ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி இதுவரை எந்த ஒரு பெரிய குற்றச்சாட்டிலும் சிக்காத நல்லதொரு நடிகர். வீட்டில் பார்த்த பெண்ணுடன் சிறப்பாக வாழ்ந்து வருபவர். தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நமது மனதில் இடம் பிடித்து வருகிறார். ஹன்சிகாவுடன் இவர் காதலில் இருக்கிறார் என்ற கிசுகிசு வெடித்தபோது அது வெறும் கிசுகிசு என்று நிரூபித்தார்.

விக்ரம் பிரபு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தற்போது வரை நல்லதொரு மனிதராக எந்தவொரு எதிர்மறை கருத்திலும், கிசுகிசுவிலும் சிக்காதவர். சிவாஜி போன்றே டீட்டோடலரக இருக்கிறார்.

Trending News