வணக்கம் சினிமாப்பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். இந்த பதிவில் 90’களுக்கு முன் தமிழ் சினிமாவில் பிரபலமான திரில்லர் திரைப்படங்களின் வரிசையை பார்க்கலாம்.
அந்த நாள்: தமிழ் சினிமாவின் முதல் திரில்லர் திரைப்படம் என்று அந்த நாள் படத்தை கூறலாம். தமிழ் ரசிகர்களுக்கு சினிமா புதுமையான அனுபவமாக இருந்தபோது முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக இந்த படம் வெளிவந்தது. 1954 ஆம் வருடம் இது போன்ற கதை அம்சம் கொண்ட படத்தை யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க இயலாது. எஸ்.பாலச்சந்தர் என்பவர் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஒரு மரணம் நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் சிஐடி ஆபிசர் ஒவ்வொரு மர்மம் முடிச்சாய் அவிழ்த்து வருவது படத்தின் சுவாரசியத்தை கூட்டியது. இந்து திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், ஜாவர் சீதாராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அதே கண்கள்: 1967ஆம் ஆண்டு ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் பலர் இணைந்து நடித்த அதே கண்கள் திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த கதையில் ஒரு பெரிய வீட்டுக்குள் அகப்பட்டு இருக்கும் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பில் ரவிச்சந்திரன் நடித்திருப்பார். இறுதி காட்சி வரை கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை அமைத்திருந்தார்கள். இந்தப் படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது
சாந்தி நிலையம்: 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த அமானுஷ்ய திரைப்படத்தில் ஜெமினி கணேசன், காஞ்சனா, நாகேஷ், அஞ்சலிதேவி மற்றும் பலர் இணைந்து நடித்திருந்தனர். பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வரும் டீச்சர் சாந்தி நிலையத்தில் நிகழும் அமானுஷ்யத்தை கண்டுபிடிக்க முயல்கிறார். அந்த மாளிகையில் நடைபெறும் குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் கூறியிருந்தார்கள். இந்த படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
சிகப்பு ரோஜாக்கள்: கிராமத்து கதைகளை மட்டுமே தொடர்ந்து இயக்கி வந்த பாரதிராஜா அவர்கள் முதல்முறையாக சோதனை முயற்சியாக கமல்ஹாசன் – ஸ்ரீதேவி ஆகியோரை வைத்து இயக்கிய திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்படும் கமல்ஹாசன் தொடர்ந்து பல பெண்களை கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்தார். இளையராஜா இசையில் இந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் வெகுவாய் மக்களைக் கவர்ந்தது.
மூடுபனி: இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் ஹிட்ச்காக்கின் சைக்கோ படத்தின் பாதிப்பில் உருவாக்கிய திரைப்படம் மூடுபனி. இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா, பானுச்சந்தர், மோகன் உட்பட பலர் நடித்திருந்தனர். சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பால் மனச்சிதைவுக்கு உள்ளாகும் பிரதாப் ஷோபாவை கடத்திக் கொண்டு வந்து தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஷோபாவால் அவரது காதலை புரிந்து கொள்ள முடிந்ததா? அவரது நிலைமை என்னவானது? என்பதை மீதி படம் கூறுகிறது. இந்த படத்திற்கு சிறப்பான இசையை வழங்கி இருந்தார் இசைஞானி இளையராஜா. இந்த படம் அவருக்கு நூறாவது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு.
நூறாவது நாள்: வித்யாச இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த க்ரைம் திரில்லர் திரைப்படம் நூறாவது நாள். இந்த படத்தில் விஜயகாந்த், மோகன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கும் சிறப்பான பின்னணி இசை கொடுத்திருந்தார் இளையராஜா. தொடர்ந்து நடக்கும் இளம் பெண்களின் கொலைகளை துப்பறிகிறார்கள் நளினியும் விஜயகாந்தும். இந்தத் திரைப்படத்தில் ஆட்டோ சங்கர் செய்த கொலைகளைப் போல கொலையாளியின் உடலை மறைக்கும் விதத்தை காட்டி இருந்தார்கள். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. மொட்டைத்தலையுடன் வரும் சத்யராஜ் அந்த நேரத்தில் பிரபலமாக இருந்தார்.
ஊமை விழிகள்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்திருந்தார். மேலும் அருண் பாண்டியன், சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக் உட்பட பலர் நடித்திருந்தார்கள். மனோஜ் கியான் இணைந்து இசையமைத்திருந்த இந்த திரைப்பட பாடல்கள் அந்த சமயத்தில் மிகவும் பிரபலம். ஆபாவாணன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.