விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவின் காதலை ஊத்தி மூட குடும்பமே பக்கா பிளான் போட்டு செயல்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பாக்யாவிற்கு, எதற்காக இந்த திருமணம் அவசர அவசரமாக நடக்கிறது என்பது தெரிய வந்தது.
இதனால் தனக்கு ஏற்பட்ட நிலை தன்னுடைய மகனுக்கும் வரக்கூடாது என பாக்யா அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறார். இதற்காக அவர் மொத்த குடும்பத்தையும் எதிர்க்க வேண்டியதாகிறது. இந்த வலுக்கட்டாயமான திருமணத்தில் எழிலின் சம்மதம் இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்காகவும் பண தேவைக்காகவும் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார் என்பது மண்டபத்தில் இருக்கும் அனைவரிடமும் பாக்யா போட்டு உடைக்கிறார்.
அதன் பிறகு எழிலும் அமிர்தாவை தான் மனதார காதலிப்பதாக தெரிவிக்கிறார். இதனால் எழில்-வர்ஷினி கல்யாணம் நிறுத்தப்பட்டு எழிலுக்கு அமிர்தா உடன் திருமணம் நடக்கப்போகிறது. அமிர்தாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் பாக்யாவின் மாமியார் மற்றும் மாமனாருக்கு இது சுத்தமாகவே பிடிக்கவில்லை.
அதுமட்டுமின்றி எழிலின் கெரியர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால்தான் முடியும். ஏனென்றால் வர்ஷினியின் அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பதால் எழிலை வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாக இருப்பார் என்றும் நம்புகின்றனர்.
ஆனால் வர்ஷினி எழிலை ஒருதலையாக தான் காதலிக்கிறார். எழில் அமிர்தாவை காதலிக்கிறார். இப்படிப்பட்ட முக்கோண காதலில் யாருடைய காதல் வெற்றி பெறும் என பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில நாட்களாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
கடைசியில் பாக்யா துணிச்சலாக மொத்த பேரையும் எதிர்த்து எழில் அமிர்தாவின் திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார். வர்ஷினியின் அப்பாவும் எழில் மற்றும் அவருடைய குடும்பத்தை பழிக்கு பழி வாங்க வேண்டும் என கடும் கோபத்துடன் தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு கிளம்புகிறார். இதையெல்லாம் பார்த்த பாக்யாவின் குடும்பம் ஆடிப் போய் நிற்கிறது.