69 ஆவது தேசிய விருதுக்கு தேர்வான படங்கள்.. விஜய் சேதுபதி, மாதவனுக்கு கிடைத்த கெளரவம்

69th National Award List: 69 ஆவது தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர்கள் நடித்த படங்களும் தேர்வாகி இருக்கிறது.

அந்த வகையில் சிறந்த தமிழ் படமாக விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று பான் இந்தியா படமாக உருவான மாதவனின் ராக்கெட்டரி படமும் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. இந்த இரு படங்களை தவிர வேறு எந்த பிரிவிலும் தமிழ் படங்கள் தேர்வாகவில்லை.

அந்த வரிசையில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு அதிக விருதுகள் கிடைத்திருக்கிறது. அதன்படி அதிக பிரபலமான படம், பின்னணி இசை, பாடகர், ஸ்பெஷல் எபெக்ட், சிறந்த சண்டை கலைஞர் ஆகிய பிரிவுகளின் கீழ் இப்படம் பல விருதுகளை தட்டி சென்றுள்ளது.

அதை அடுத்து புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அதேபோல் கங்குபாய் காத்தியவாடி படத்திற்காக ஆலியா பட்டுக்கும், மிமி படத்திற்காக கீர்த்தி சனோனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கிறது.

மேலும் சிறந்த இசையமைப்பாளர் விருது புஷ்பா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கிடைத்துள்ளது. இவ்வாறாக புஷ்பா மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் அதிக விருதுகளை தட்டி தூக்கி இருக்கிறது. கடந்த தேசிய விருது அறிவிக்கப்பட்ட போது சூரரைப் போற்று படம் தான் அதிக விருதுகளை வாங்கி இருந்தது.

ஆனால் இந்த முறை தமிழ் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் கிடைக்காதது கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் தரமான படங்கள் என்ற பாராட்டுகளைப் பெற்ற கடைசி விவசாயி, ராக்கெட்டரி படங்கள் தேர்வானது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.