களை கட்டும் பிக் பாஸ் சீசன் 6.. உறுதியான 6 போட்டியாளர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது சீசனில் அடி எடுத்து வைக்கப் போகும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் பிரபலங்களை தேடி தேடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கும் விஜய் டிவி இந்த வருடமும் பல சர்ச்சை பிரபலங்களை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்ற அட்டகாசமான அறிவிப்பும் வெளியானது.

மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தரப்பிலிருந்து ஆறு நபர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அவர்களுடன் சின்னத்திரை மற்றும் பெரிய திரை பிரபலங்களும் போட்டி போட இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் தற்போது ஆறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களாக ரட்சிதா மகாலட்சுமி, மைனா நந்தினி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே சரவணன் மீனாட்சி தொடரில் தோழிகளாக நடித்திருந்தனர்.

இவர்களுடன் ஜீ தமிழ் சத்யா சீரியல் மூலம் பிரபலமான ஆயிஷாவும் கலந்து கொள்ள இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த தொடரின் இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் ஜீ தமிழுக்கு தாவினார். தற்போது அவரை விஜய் டிவி மீண்டும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அழைத்து வந்துள்ளது.

அவரைத் தொடர்ந்து தொகுப்பாளினி மகேஸ்வரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தற்போது தன்னுடைய திருமணத்தின் மூலம் சோசியல் மீடியாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய ரவீந்தரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இப்படி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத இந்த பிரபலங்களுடன் யூடியூப் மூலம் பிரபலமான ஜிபி முத்துவும் கலந்து கொள்ள இருக்கிறார். ஏற்கனவே இவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் டிவி பெரும் முயற்சி எடுத்தது. அதன் பலனாக தற்போது இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இப்படி பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாத பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதால் இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று தெரிகிறது.