தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் தொடர்பான விவகாரம். தவெக சட்டமன்ற உறுப்பினர் சி.அருள் விக்னேஷ்,மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும்,அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால்,இந்தக் குற்றச்சாட்டுகளை எம்.எல்.ஏ மறுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில்,அருள் விக்னேஷ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும்,இந்த விவகாரத்தில் தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் நவம்பர் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது,மாவட்ட ஆட்சியர் தரப்பில் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்றும், குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசுத் தரப்பில்,கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமைச் செயலரிடம் இதுவரை புகார் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று அடுத்த நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு,வழக்கை நாளை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத நிலையில்,நாளைய விசாரணையில் தமிழக அரசு அளிக்கும் விளக்கம் இந்த விவகாரத்தில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.




