Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

பெண் ஆட்சியர் விவகாரம்.. உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் உறுதி

பெண் ஆட்சியர் விவகாரம்.. உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் உறுதி

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் பத்மஜா தொடர்பான சர்ச்சைதான்.அவருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும்,மாவட்ட ஆட்சியரின் வீட்டிற்குச் சென்று அத்துமீறியதாகவும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.


இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.தன்னை அரசியல் ரீதியாக அவமானப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.இதற்கிடையே,இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர்,கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரம் ஏற்கெனவே பலமுறை பேசப்பட்டுள்ளதாகவும்,இது முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும்,இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து,அதில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.இந்த விவகாரத்தில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதற்கிடையே,இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.மேலும்,சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ புகார் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டன.


தற்போது அமைச்சர் அளித்துள்ள இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.இருப்பினும்,எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.விசாரணையின் முடிவில்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.