எம்.ஜி.ஆர் படங்களில் ஆக்சன், செண்டிமெண்ட், பாடல்கள் எல்லாம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும்.
அவர் நடிக்கும் படங்களில் பணியாற்றுகிற இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர்கள், தயாரிப்பாளரின் பங்கு முக்கியம் என்றாலும், எம்.ஜி.ஆரும் அதற்கு முக்கிய காரணம்.
எம்.ஜி.ஆரின் பாடல்களில் தத்துவங்கள், கருத்துக்கள் நிரம்பி வழியும். அந்தக் காலத்தில் வெளியான பாடல்களுக்கு இன்றுவரை ரசிகர்கள் உள்ளனர்.
அது வாழ்க்கைக்கும் வழி காட்டுவதாகவும் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர் படங்களில் பாடலாசிரியர், கவிஞர்கள் எழுதினாலும், அந்தக் கருத்துகள் அவர் ஏற்றுக் கொண்டால்தான் படத்தில் இடம்பெறும்.
ஏனெனில் தவறான ஒரு கருத்து கூட மக்களை சென்றுவிடக் கூடாது என்பதை எம்.ஜி.ஆர் கொள்கையாகவே வைத்திருந்தார்.
நினைத்ததை முடிப்பவன் படத்தில் பாடலுக்கு சென்சார் செய்த எம்.ஜி.ஆர்
எம்ஜி.ஆர் – மஞ்சுளா – லதா – எம்.என். நம்பியார் நடிப்பில், நீலகண்டன் இயக்கத்தில் 1975 -ல் நினைத்தை முடிப்பவன் படம் வெளியானது. இப்படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.
இதில் ஒரு பாடல் எழுதுவதற்காக நீண்ட நாள் கழித்து, கவிஞர் மருதகாசியை எம்.ஜி.ஆர் அழைத்து வந்து, ’கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’ பாடல் எழுத வாய்ப்பளித்தார்.
“பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு, தன் வழியே போகிறவர் போகட்டுமே” என கவிஞர் எழுதியிருந்தார்.
அவரை அழைத்த எம்.ஜி.ஆர் அவரது வரிகளை சுட்டிக்காட்டி, ”தன் வழியே ஏன் நல்வழியாக இருக்க கூடாது?” என்று கேட்டு, அந்த வரிகளை மாற்றிவிடும்படி வலியுறுத்தினார்.
எம்.ஜி.ஆர் கூறியபடி, மருதகாசியும் அந்த வரிகளை மாற்றிக் கொடுத்துவிட்டார். அதன்படி, ”பொன்பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு, கண்மூடிப் போகிறவர் போகட்டுமே” என எழுதியிருந்தார்.
இதைப் படித்துவிட்டு எம்.ஜி.ஆர். அவரைப் பாராட்டியதாக கூறப்படுகிறது.