இப்போதைய தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் ஏகப்பட்ட பிரமோஷன்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதிலும் தயாரிப்பாளர்கள் ஆடியோ லான்ச் என்ற நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்டமாக நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
ஆனால் அப்போதைய காலகட்டத்தில் எல்லாம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்பது அவ்வளவு பெரிய நிகழ்வாக இருக்காது. படம் வெளியாகி வெற்றி பெற்றுவிட்டால் வெள்ளிவிழா கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தான் நடத்தப்படும். அப்படி இருந்த காலகட்டத்தில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தி ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் தான் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமான நபராக இருந்தவர் தியாகராஜன். ஒரு பாக்ஸராக இருந்த இவர் எதிர்பாராதவிதமாக சினிமாவுக்குள் நுழைந்தார். அந்த சமயத்தில் இவரிடம் எம்ஜிஆர் நீ நடிக்க ஆரம்பித்து விட்டாய். அதனால் பாக்ஸிங் செய்ய வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார்.
இதை ஏற்றுக்கொண்ட தியாகராஜனும் பாக்ஸிங் செய்வதை விட்டுவிட்டு முழுநேர நடிகராக மாறினார். மேலும் படங்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்ட தியாகராஜன் பூவுக்குள் பூகம்பம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.
படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு எம்ஜிஆரை சந்தித்த தியாகராஜன் இந்த படத்தின் பாடல்களை வெளியிட வேண்டும் என்றும், நீங்கள் தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். எம்ஜிஆரும் அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் உடனே சம்மதித்து உள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட திரையுலகினர் முதலமைச்சர் எப்படி இதுபோன்ற விழாவில் கலந்து கொள்வார் என்று அவரை கிண்டல் செய்துள்ளனர். ஆனால் வாக்கு கொடுத்தது போல் எம்ஜிஆர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
எம்ஜிஆர் வந்ததை கேள்விப்பட்டு தான் பல பிரபலங்கள் அதன் பிறகு இந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார்களாம். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் ஆடியோ ரிலீஸ் என்ற ஒரு ட்ரெண்ட் உருவாகி இருக்கிறது அந்த வகையில் இப்படி ஒரு ட்ரெண்டை உருவாக்கிய பெருமை தியாகராஜனுக்கு உண்டு.