சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆர் சுந்தரராஜனின் இயக்கத்தில் தரமான 5 படங்கள்.. பாட்டுக்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக நன்கு அறியப்படுபவர் ஆர் சுந்தர்ராஜன். இவர் பல படங்களில் புகழ்பெற்ற இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் வெள்ளி விழா கண்டது. அவ்வாறு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் மனதில் நிற்கும் 5 படங்களை பார்க்கலாம்.

பயணங்கள் முடிவதில்லை : ஆர் சுந்தர்ராஜன் திரைக்கதையில் உருவான படம் பயணங்கள் முடிவதில்லை. இப்படத்தில் மோகன், பூர்ணிமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வாழ்வில் இணையாத காதல் ஜோடிகள் சாவில் இணையும் கதை. சுந்தர்ராஜன் முதல் படமான பயணங்கள் முடிவதில்லை படம் கிட்டத்தட்ட 400 நாட்களை தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வைதேகி காத்திருந்தாள் : ஆர் சுந்தர்ராஜன் எழுதி, இயக்கி 1984 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். விஜயகாந்த், ரேவதி மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் காதலியை இழந்த விஜயகாந்தும், கணவரை இழந்த ரேவதியும், ஊரில் உள்ள இளம் ஜோடியை பல எதிர்ப்புகளை மீறி எப்படி இணைத்து வைக்கிறார்கள் என்பதே வைதேகி காத்திருந்தாள் படம். இப்படத்தில் கதை, பாடல்கள், காமெடி என அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

அம்மன் கோயில் கிழக்காலே : ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதா ஆகியோர் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அம்மன் கோயில் கிழக்காலே. இப்படத்தில் நகைச்சுவை, காதல், பாடல், சென்டிமென்ட் என அனைத்தும் ஸ்கோர் செய்தது. இப்படத்தில் விஜயகாந்த், சின்னமணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அம்மன் கோயில் கிழக்காலே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மெல்ல திறந்தது கதவு : ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு மோகன், ராதா, அமலா நடிப்பில் வெளியான திரைப்படம் மெல்ல திறந்தது கதவு. இப்படத்தில் மோகனின் முதல் காதல் தோல்வி அடைந்ததால் முறைப்பெண்ணாக ராதாவின் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனால் ராதா தற்கொலைக்கு முயற்சிக்கும் போது அவளின் காதலை உணர்ந்து ஏற்கிறார் மோகன். இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ராஜாதி ராஜா : ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நதியா மற்றும் ராதா நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினி மீது கொலைப்பழி விழுந்து சிறை செல்கிறார். உண்மையான கொலை குற்றவாளியை நிரூபிக்க ரஜினி தன்னை போல் உள்ள மற்றவரை சிறைக்கு அனுப்பி வைத்து குற்றவாளியை கண்டறிகிறார். இப்படம் பாக்ஸ் ஆபீசில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

Trending News