திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தொடர் தோல்விகளால் மார்க்கெட்டை இழந்த 6 இயக்குனர்கள்.. வேற ரூட்டை பிடித்த தனுஷ் பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே சில இயக்குனர்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளனர். இதனால் இவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். ஆனால் அந்த இயக்குனர்களின் அடுத்தடுத்த தொடர் தோல்விப் படங்களால் மார்க்கெட்டை இழந்துள்ளனர். அவ்வாறு தொடர் தோல்வி கொடுத்து மார்க்கெட்டை இழந்த 6 இயக்குனர்களை பார்க்கலாம்.

ராஜேஷ் : தமிழ் சினிமாவில் முழு நீள நகைச்சுவைப் படங்களை எடுக்கக் கூடியவர் இயக்குனர் ராஜேஷ். இவர் முதலில் ஜீவாவை வைத்து சிவா மனசுல சக்தி என்ற படத்தை எடுத்து இருந்தார். அதன்பிறகு பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என தொடர் தோல்விப் படங்களால் ராஜேஷ் மார்க்கெட் இழந்தார்.

ஏஎல் விஜய் : அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். அதன்பிறகு மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். சமீபகாலமாக இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களின் கவனம் பெறவில்லை. சமீபத்தில் கங்கனா ரனாவத் வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி தலைவி என்ற படத்தை ஏஎல் விஜய் இயக்கி இருந்தார். தற்போது அனுஷ்காவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

சுந்தர் சி : சுந்தர் சி முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சமீபகாலமாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

லிங்குசாமி : ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தொடர் தோல்வியால் லிங்குசாமி மார்க்கெட்டை இழந்தார்.

செல்வராகவன் : துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இதை தொடர்ந்து தனுஷை வைத்து பல ஹிட் படங்களை செல்வராகவன் கொடுத்துள்ளார். சமீபகாலமாக இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

சுசீந்திரன் : வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இதைத்தொடர்ந்து இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

Trending News