சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தமிழ் சினிமாவை வாழ வைத்தும் காணாமல்போன 7 பெரும் முதலாளிகள்.. ரீ-என்ட்ரியில் தெறிக்கவிடும் ஏவிஎம்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து பல திரைப்படங்களை தயாரித்து பின் காலப்போக்கில் காணாமல் போன தயாரிப்பாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களை பற்றியும் காணலாம்.

ஏவிஎம்: பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என்று பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்தது. இயக்குனர் எஸ் பி முத்துராமன் வைத்து மட்டுமே 50 படங்கள் வரை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். முற்றிலும் குடும்பப் பாங்கான திரைப்படங்களையும் மாஸ் கமர்சியல் படங்களை மட்டுமே எடுத்து வந்த ஏவிஎம் நிறுவனம் காலப்போக்கில் காதல் படங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் காணாமல் போனது.

திரைப்படங்களில் இருந்து வந்த போதே தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் என்று தங்களை குறுக்கிக் கொண்டனர். ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் மூலம் மீண்டும் மாபெரும் என்ட்ரி கொடுத்தாலும் அதன் பிறகு தயாரித்த எந்த படமும் சரியாக போகாத காரணத்தால் முற்றிலும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். தற்போது மெல்ல மெல்ல தலைதூக்கி ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது இந்த நிறுவனம்.

ஜெமினி ஸ்டுடியோஸ்: எஸ் எஸ் வாசன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் கருப்பு வெள்ளை சினிமா காலம் தொட்டே இயங்கியது. எம்ஜிஆர், சிவாஜி, நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர் என்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளின் சூப்பர் ஸ்டாரையும் வைத்து படம் தயாரித்தது. 50 கள் 60 கள் என்று அந்த காலத்தில் முதன்மை ஸ்டுடியோவாக இருந்தது என்றால் அது மிகையல்ல. காலப்போக்கில் இவர்களது படங்கள் சரியாக போகாத காரணத்தால் சீக்கிரம் கடையை மூட வேண்டிய நேரத்திற்கு வந்துவிட்டது. 1975 ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோஸ் கலைக்கப்பட்டது என்பது வரலாறு.

கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ்: இயக்குனர்கே பாலச்சந்தர் அவர்களின் வீட்டு சொத்தான கவிதாலயா ப்ரோடக்ஷன்சை அவரது மகள் புஷ்பா கந்தசுவாமி தலைமை ஏற்று நடத்தி வந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்த நிறுவனம் இது. கே பாலச்சந்தர் பல திரைப்படங்களை தனது சொந்த நிறுவனத்திலேயே இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிந்துபைரவி, வேலைக்காரன், சிவா, அண்ணாமலை, முத்து, சாமி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த நிறுவனம், காலத்திற்கு ஏற்ப படம் கொடுக்க முடியாத காரணத்தால் இந்நிறுவனமும் 2008 ஆம் ஆண்டு படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு டிவி சீரியல் தயாரிக்க வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் பிலிம்ஸ்: விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர் ரவிச்சந்திரன். காதலுக்கு மரியாதை என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானவர், தொடர்ந்து ரமணா, அந்நியன், டிஸ்யும், உன்னாலே உன்னாலே, தசாவதாரம் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்தவர். நன்றாக முன்னேறிக் கொண்டிருந்த இவர் மீது யார் கண் பட்டதோ இவர் தயாரித்த மற்ற பிரம்மாண்ட படங்களான ஆனந்தத்தாண்டவம், மரியான், திருமணம் என்னும் நிக்கா, பூலோகம் , ஐ, போன்ற திரைப்படங்கள் நிறைய செலவு வைத்தது. இதன் பிறகு படம் தயாரிப்பது விநியோகிஸ்தம் செய்வது போன்ற வற்றை தவிர்த்து முற்றிலும் சினிமாவில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

ஸ்ரீ சூர்யா மூவிஸ்: தெலுங்கு, தமிழ் பட உலகில் பிரம்மாண்டமாக படம் தயாரித்த இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ எம் ரத்னம். குஷி, காதலர் தினம், இந்தியன், கில்லி, செவன் ஜி ரெயின்போ காலனி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்தவர். தெலுங்கிலும் இது போன்ற நிறைய மாஸ் ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார். இறுதியாக இவர் தயாரித்த சில தெலுங்கு படங்களும் பீமா, தர்மபுரி, கேடி போன்ற தமிழ் படங்களும் மண்ணைக் கவ்வியது தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்கள் மூலமாக ஓரளவுக்கு நல்ல நிலைமையை பெற்றாலும் தொடர்ந்து முன்பு போல படங்களை தயாரிப்பது இல்லை.

கே.டி குஞ்சுமோன்: 90களில் மிகப் பிரம்மாண்டமான படங்களை தயாரித்தவர் கே டி குஞ்சுமோன். சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்தவர் இவர். ஷங்கர் படங்களை தயாரித்த காரணத்தால் அதேபோல் கதையை சொன்ன பிரவின் காந்தியை நம்பி பல கோடி ரூபாயை அப்போதே வாரி இறைத்து ரட்சகன் என்னும் படத்தை தயாரித்தார். இந்த படம் அவருக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் இவர் தயாரித்த இரண்டு விஜய் படங்களான நிலாவே வா, என்றென்றும் காதல் ஆகிய இரண்டும் சரியாக போகாத காரணத்தால் தொடர்ந்து கடலில் தத்தளித்த அவர் அதன் பிறகு படங்கள் தயாரிக்கவில்லை. மேலும் தனது இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் விஜய் அவர்களின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான் என்று குற்றமும் சுமத்தி இருந்தார். சமீபத்தில் ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பி எல் தேனப்பன்: ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், கனா கண்டேன், பேரன்பு போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் தேனப்பன். முத்து, குரங்கு பொம்மை, பேரன்பு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர். சிம்புவை வைத்து தயாரித்த வல்லவன் திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரும் நஷ்டத்தை பெற்றவர் அதன் பிறகு தயாரித்த எந்த படமும் சரியாக்க போகாத காரணத்தால் பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். தெனாலி, படையப்பா போன்ற மாபெரும் ஹிட் திரைப்படங்களுக்கு இவர் உப தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல திரைப்படங்களுக்கு ப்ரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Trending News