தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களத்தின் மூலம் கவனம் ஈர்த்து வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2027 ஜனவரிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதன்படி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இன்பன் உதயநிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இன்பன் உதயநிதி மீது இருந்து வரும் நிலையில், தற்போது மாரி செல்வராஜுடன் அவர் இணையவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்தப் புதிய படத்திற்கான பணிகள் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல் குறித்து படக்குழு தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பன் உதயநிதி கதாநாயகனாக அறிமுகமானால், இப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான தொடக்கமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!




