திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

எதிர்க்கட்சியா இருந்தா அப்படி, ஆளும் கட்சியா இருந்தா இப்படி.. பரந்தூரில் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

Vijay: பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக சுற்றுவட்டார 12 கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்த இருக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசின் இந்த முடிவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

அதிலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று நேரில் கிராம மக்களை சந்தித்து பேசி இருக்கிறார். நேற்றிலிருந்து இதுதான் மீடியாக்களின் பரப்பரப்பு செய்தியாக இருக்கிறது.

தற்போது பிரச்சாரத்திற்கு பயன்படும் திறந்த வண்டியில் மக்களை சந்தித்துள்ள விஜய் ஆளும் கட்சியை எதிர்த்து அனல் பறக்க பேசினார். இதற்கு கிராம மக்களிடமிருந்து ஆதரவு எழுந்துள்ளது.

விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

அவர் பேசியதாவது நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. ஆனால் வளர்ச்சி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடாது. விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை பரந்தூரில் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.

மக்களுக்கு பாதிப்பு இல்லாத எந்த இடத்தில் வேண்டுமானாலும் விமான நிலையத்தை அமைத்துக் கொள்ளுங்கள். இனிமேலும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தீர்கள். அதுவே ஆளும் கட்சியாக இருக்கும்போது எதிர்க்கிறீர்கள் இது எனக்கு புரியவில்லை.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதே போல் பரந்தூரிலும் செய்திருக்க வேண்டும்.

அப்படி செய்யவில்லை இதிலிருந்து இந்த விமான நிலையம் மூலம் அவர்களுக்கு ஏதோ ஆதாயம் இருக்கிறது என தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என விஜய் பேசினார்.

மேலும் எப்போதும் உங்களுடன் நான் இருப்பேன். வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும் என மக்களுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

Trending News