ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

போலீசாருக்கு பெருமை சேர்த்த 7 படங்கள்.. வெறியாய் வேட்டையாடிய வால்டர் வெற்றிவேல்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் கம்பீரமான போலீஸாக நடித்து வெற்றி நடிகர்களும் அவர்களது படங்களையும் காணலாம். பொதுவாக போலீஸ்காரராக நடித்தால் நிச்சயம் அந்த நடிகர்களுக்கு பெரிய ரசிகர் வட்டம் உருவாகும் என்பது தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத உண்மை. அந்த வரிசையை தற்போது பார்க்கலாம்.

வால்டர் வெற்றிவேல்: தொண்ணூறுகளில் மிகவும் பிசியாக இருந்த நடிகர் சத்தியராஜ் அவர்களுக்கு வால்டர் வெற்றிவேல் திரைப்படம் மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தில் அவர் கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். கதைப்படி சொந்த தம்பியையே குற்றவாளி என்று தெரிந்த பின்பு அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுகன்யா நடிக்க மற்றும் விஜயகுமார், கவுண்டமணி போன்றோர் நடித்திருந்தனர். இந்த படம் 175 நாட்களுக்கு மேல் தாறுமாறாக ஓடியது.

சத்ரியன்: கேப்டன் விஜயகாந்த் அவர்கள் போலீசாக நடிப்பதற்கு பிறந்தவர் போல அவர் அத்தனை படங்களில் போலீஸாக நடித்துள்ளார். அதில் முக்கியமானது ஒரு திரைப்படமாக சத்ரியன் பார்க்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் அவர்களது தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சத்திரியன். இந்த படத்தில் விஜயகாந்துடன் பானுப்ரியா, திலகன், விகே ராமசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இசை இளையராஜா. மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தில் வில்லன் நடிகர் திலகன் அவர்களின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

சாமி: விக்ரம் அவர்களின் சாமி படத்துக்கு பிறகு அவரது லெவல் வேறு எங்கேயோ சென்றது. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். நான் போலிஸ் இல்ல பொறுக்கி என்று அவர் ஆரம்பித்த இந்த வகையில் தெனாவட்டு நடிப்பு அதன் பிறகு வந்த பல போலிஸ் திரைப்படங்களில் தெனாவட்டாக நடிப்பதற்கு அடித்தளமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. இந்த திரைப்படத்தில் நடிகர் கோட்டா சீனிவாசராவ் பெருமாள் பிச்சை பாத்திரத்தில் பிரமாதமாக நடித்து இருப்பார். 200 நாட்கள் ஓடியது இந்த படம்.

காக்க காக்க: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா அவர்களுடன் இணைந்து செய்த மேஜிக் திரைப்படம் காக்க காக்க. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார். பாண்டியா என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவன் நடித்து இருந்தார். பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் திறமையான இசையை கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் சூர்யா அவர்களின் திரை வாழ்க்கையை புதுப்பித்தது என்று சொல்லலாம்.

சிங்கம்: சூர்யாவின் இந்த போலிஸ் படம் மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசும் ஹரி படங்களுக்கு ஏற்றவாறு சூர்யா இந்தப் படத்தில் திறம்பட வசனங்கள் பேசி நடித்து இருந்தார். மாபெரும் வெற்றி பெற்றது திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து இருந்தார். இந்த படத்தில் நடித்தபோது சூர்யாவின் உயரம் விமர்சிக்கப்பட்டது ஞாபகம் இருக்கலாம். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

வேட்டையாடு விளையாடு: கவுதம் வாசுதேவ் மேனன் மீண்டும் ஒரு முறை போலீஸ் கதையை கொண்டு கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து இயக்கினார். கமலின் ரசிகர் என்பதால் இந்தப் படம் சிறப்பாக உருவானது. இந்த படத்திற்கும் சிறப்பான இசையை வழங்கி இருந்தார் கௌதமின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அமுதன், இளமாறன் என்று இரண்டு கே நண்பர்களை பற்றி இந்தப் படம் விரிவாக கூறியிருந்தது. அவர்களது வில்லத்தனம் மிரட்டலாக இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் நிஜ போலீசுடன் பழகி அவர்களது உடல்மொழியை தனது நடிப்பில் கொண்டு வந்தார்.

தர்பார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரைப்படத்தில் மிடுக்கான போலீசாக நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்கி இருந்தார் ஏ ஆர் முருகதாஸ். எஸ் பி பாலசுப்பிரமணி அவர்கள் தன் மறைவிற்கு முன் இந்தப் படத்தில்தான் கடைசியாக ஒரு பாடல் பாடியிருந்தார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸும், ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்பட்டிருந்தது.

Trending News