தமிழ் சினிமாவில் கதாநாயகன், குணச்சித்திர நடிகர், வில்லன் என பல பரிமாணங்களில் முத்திரை பதித்தவர் எம்என் நம்பியார். இவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை நடித்து மிரட்டி இருந்தார். உடல்நலக்குறைவால் தன்னுடைய 89 ஆவது வயதில் நம்பியார் காலமானார். மார்ச் 7 இன்று அவருடைய பிறந்த தினம், எம் என் நம்பியார் நடிப்பில் மறக்க முடியாத 5 படங்களை பார்க்கலாம்.
மந்திரகுமாரி : எம்ஜிஆர், மாதுரி தேவி, எம்என் நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மந்திரகுமாரி. இப்படத்தின் வசனம், திரைக்கதை மு கருணாநிதி எழுதியிருந்தார். இப்படத்தில் மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவாக நம்பியார் நடித்திருந்தார். இப்படத்தில் நம்பியாரின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
வேலைக்காரி : கே.ஆர்.ராமசாமி, வி.என்.ஜானகி , எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடிப்பில் 1949 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலைக்காரி. இப்படத்திற்கு அண்ணா எழுதிய வசனங்கள் மிகவும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஒரு பணக்காரரின் மகன் மூர்த்தியாக நம்பியார் நடித்திருந்தார்.
ஆயிரத்தில் ஒருவன் : எம்ஜிஆர், ஜெயலலிதா, எம்என் நம்பியார் ஆகியோர் நடிப்பில் 1965 இல் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தில் கடற்கொள்ளையர்களின் தலைவனாக நம்பியார் நடித்திருந்தார். இப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நம்பியார். அதன் பிறகு எம்ஜிஆர் படம் என்றாலே அதில் நம்பியார் தான் வில்லன் கதாபாத்திரம் என தேர்வு செய்யப்பட்டார்.
தில்லானா மோகனாம்பாள் : ஏபி நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். இப்படத்தில் எம் என் நம்பியார் மதன்பூரின் மகாராஜாவாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தூறல் நின்னு போச்சு : கே பாக்யராஜ் இயக்கத்தில் பாக்யராஜ், சுலோச்சனா, எம் என் நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தூறல் நின்னு போச்சு. இப்படத்தில் குஸ்தி வாத்தியாராக நம்பியார் நடித்திருந்தார். இப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் நம்பியார்.