வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உயிருக்கு பயந்து தப்பியோடிய ராஜபக்சே.. பிரபாகரனை நினைவுபடுத்தி ட்விட் போட்ட வைரமுத்து

கொரோனா பாதிப்பினால் பல நாடுகளும் கடுமையான விலைவாசி ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதில் இலங்கை மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

இலங்கையில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாத்துறை போன்ற அனைத்தும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு எக்கச்சக்கமாக ஏறியது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் அதிகரித்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பிரதமர் ராஜபக்ஷே கண்டுகொள்ளாமல் இருந்தார். அதனால் இலங்கையில் மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். மேலும் அரசும் அதை தடுக்க ராணுவத்தை ஏவி விட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதனால் இலங்கையே கலவர பூமியாக மாறியது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் தங்கள் போராட்டத்தை கடுமையாக்கினர். இதனால் இலங்கை எங்கிலும் வன்முறையும், கலவரமும் சூழ்ந்தது. இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க முடியாத ராஜபக்சே தன்னுடைய பதவியிலிருந்து விலகினார்.

மேலும் மக்களுக்கு பயந்து அவர் பல பாதுகாப்புகளுடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறினார். இருப்பினும் அவருக்கு எதிரான போராட்டங்களும், மக்களின் கோபமும் இன்னும் அதிகரிக்கத்தான் செய்தது. இந்நிலையில் ராஜபக்சே உயிருக்கு பயந்து வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சிங்கள பத்திரிகைகளில் வெளிவந்தது.

இந்நிலையில் இது குறித்து பல அரசியல் கட்சி பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை கூறி வந்தனர். அதில் கவிஞர் வைரமுத்து ஒரு பரபரப்பான டிவிட் போட்டுள்ளார். அதில் அவர் நான்கு பக்கம் மரணம் சூழ்ந்த போதும், தாயகம் பிரியேன் தாய் மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகர தமிழனின் பேராண்மை எங்கே.

ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்க துடிக்கும் ராஜபக்சே எங்கே. ஓ சர்வதேச சமூகமே இப்போதேனும் தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த கருத்தையே தான் மக்கள் பலரும் கூறி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அவல நிலைக்கு ராஜபக்சே தான் காரணம் என்று அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது.

Trending News