புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இறுதிகட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறன்.. இந்திய அளவில் சூரிக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம்

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வந்த சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் விடுதலை. மாறுபட்ட கதைகளை இயக்கி வெற்றி கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

விடுதலைப் படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படத்தில் சூரி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு காடு மற்றும் கிராமத்தை சுற்றியே எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் பிரச்சினையால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழு திணறி வந்தது. இந்நிலையில் ஒருவழியாக இறுதிகட்ட படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கயுள்ளது. இதற்காக கிராமத்தில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளது.

இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு சண்டை காட்சிகளுக்காக போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிவாஜி, ராவணன், எந்திரன் போன்ற படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய பீட்டர் ஹீன் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார். இதனால் இப்படத்தில் சண்டை காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது.

மேலும் விடுதலை படத்தை பான் இந்திய படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி வருகிறது.

முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் சூரியின் திரைப்படம் பான் இந்தியப் படமாக வெளியாவது சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் சூரி விடுதலை படத்திற்காக பல படங்களை தவற விட்டதால் இப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News