Vijay: நடிகர் விஜய் அரசியல் களம் வந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு ஒட்டுமொத்த அரசியல் உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.
அந்த மாநாட்டில் விஜய் பேசிய பல விஷயங்களுக்கு மூத்த அரசியல்வாதிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் விஜய்க்கு எதிராக முதன்முதலாக மூச்சு முட்ட குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.
ஒரே மேடையில் விஜய்-திருமாவளவன்
நேற்று வரை அண்ணன் தம்பியாக இருந்த இந்த உறவு கட்சி கொள்கைகள் வெளியான பிறகு அரசியல் எதிரியாக மாறிவிட்டது என நேரடியாக அவர் தெரிவித்துவிட்டார். திராவிட மாடல் ஆட்சி என்ற வார்த்தைக்கு விஜய் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் விஜய்க்கு தங்களுடைய பதிலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் மாநாடு பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடமும் கேட்கப்பட்டது. திருமாவளவனும் தன்னுடைய எதிர்ப்பை தான் தெரிவித்திருந்தார். இதற்கு இடையில் விரைவில் விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடையில் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு முடிந்ததும் விஜய்க்கு ஆதரவாக ட்வீட் போட்டிருந்தார். இதனால் திருமாவளவன் ரொம்பவும் கோபமாக இருப்பதாகவும் ஆதவிடம் பேசவில்லை என்றும் கூட செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றை வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட இருக்கிறாராம். இந்த புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வழங்க விஜய் அதே மேடையில் இந்த நூலை பெற்றுக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.
அதாவது ஏற்கனவே திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் திமுக கூட்டணியில் பங்கு இல்லை என்பதால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடைய அதிருப்தியை போக்கும் அளவிற்கு கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்திருக்கிறார் விஜய்.
இதனால் இவர்களுக்குள் சமரசம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை போன்ற ஒரு பெரிய கூட்டணி விஜய் பக்கம் தாவி விடுமோ என சந்தேகம் வந்தாலே திமுக கட்சி ஆட்டம் கண்டுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.