புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித், விஜய் படம் என்றால் இவருக்கு அல்வாதான்.. ஏற்கனவே வச்சி செஞ்சது போதாதா தலைவரே

தெலுங்கு முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான படம் “பீம்லா நாயக்”. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், நல்ல வசூலையும் வாரிக் குவித்தது. இது மலையாளத்தில் வெளியான “அய்யப்பனும் கோஷியும்” படத்தின் ரீமேக் ஆகும். இப்போது “ஹரி ஹர வீர மல்லு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் அவர் ஹரி ஷங்கர் படத்தில் இணையவுள்ளார்.

தற்போது அவரின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரீமேக் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பவன் கல்யாண் மேலும் ஒரு ரீமேக்கிற்கு ஒப்புதல் அளித்துள்ளார், அதை ஒரு இளம் இயக்குனர் இயக்குகிறார். தளபதி விஜய் நடித்து தமிழ் பிளாக்பஸ்டர் படமான தெறியின் தெலுங்கு ரீமேக்கில் பவன், சாஹோ புகழ் இயக்குனர் சுஜீத்துடன் கைகோர்க்கிறார். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

டிவிவி தனய்யா இந்த ஆக்ஷன் எண்டர்டெய்னரை தயாரிக்கவுள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி திரைப்படம் தெலுங்கில் போலிஸோடு என்ற பெயரில் ஏற்கனவே டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.பவன் கல்யாணின் நெருங்கிய நண்பரும், பிரபல இயக்குனருமான த்ரி விக்ரம் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளார்.

தெறி 2016 ஆம் ஆண்டில், அட்லீ எழுதி இயக்கியது மற்றும் வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ். தாணுவால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் விஜய் மற்றும் சமந்தா ரூத் பிரபு நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த கதை ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியை சுற்றி சுழலும், அவர் தனது மகளை பழைய எதிரிகளிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்றும்,மேலும் தனது மனைவியின் மரணத்திற்கு எவ்வாறு பழி வாங்குகிறார் என்பதே ஆகும்.

ராஜா ராணி பிறகு அட்லியின் இரண்டாவது படமாக இது அமைந்தது, இதனை தொடர்ந்து இருவரும் மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் இணைந்துள்ளனர். ₹75 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ₹150 கோடி வசூலித்து, வணிகரீதியாக வெற்றியடைந்து, 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரைப்படம் ஆனது. மேலும் மூன்று SIIMA விருதுகள், IIFA உற்சவம் விருதுகள், இரண்டு ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மற்றும் 64வது பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகளையும் பெற்றது. இது தற்போது விஜய்யின் படங்களில் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பவன் கல்யாண் ஏற்கனவே விஜயின் லவ் டுடே, குஷி, திருப்பாச்சி போன்ற படங்களை ரீமேக் செய்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான வீரம், சல்மான் கானின் தபாங் படங்களையும் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “தம்முடு” என்ற படத்தை தமிழில் விஜய் “பத்ரி” என ரீமேக் செய்தது கூடுதல் தகவல்.

Trending News