கோலிவுட்டில் தனித்துவமான திரைப்படங்களை இயக்குவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மிஷ்கின்.இவரது இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி,நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், வித்தியாசமான சப்ஜெக்ட் மற்றும் சென்டிமென்ட் சீன்களால் கவனம் பெற்றது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் குறித்து மிஷ்கின் பகிர்ந்துள்ள தகவல் தற்போது கவனம் பெற்று வருகிறது. ‘சைக்கோ’ படத்தைப் பார்த்துவிட்டு இரவு 10:30 மணியளவில் விஜய் சேதுபதி நேரடியாகத் தனது வீட்டிற்கு வந்ததாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.அப்போது வீட்டிற்கு வந்த அவர், தன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு தனது அன்பையும் பாராட்டையும் வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
மேலும்,படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் இருவரும் விரிவாகப் பேசியுள்ளனர். இந்த உரையாடல் சுமார் நான்கு மணி நேரம் நீடித்ததாகவும் மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார். ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அதன் சீன்கள் ,கேரக்டர்கள் மற்றும் உணர்வுகள் குறித்து இவ்வளவு நேரம் விவாதித்தது தனக்கு மகிழ்ச்சியளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் நடிப்புத் திறமை குறித்து பேசிய மிஷ்கின்,வாழ்க்கையை ஆழமாக உணர்ந்து புரிந்துகொள்ளும் தன்மையே அவரைச் சிறந்த நடிகராக உருவாக்கியுள்ளது என்று பாராட்டியுள்ளார். ஒரு படைப்பைக் கொண்டாடுவதில் இருக்கும் உண்மையான அன்பையும், கலைஞர்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் இந்தச் சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




